AUS vs SA : 17.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸி வீரர், தெ.ஆ’வை சுருட்டி செய்த முதல் சம்பவம் – மும்பை ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

Cameron Green
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் களமிறங்கியுள்ள இத்தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் வெறும் 142 ஓவர்களில் ஒன்றே முக்கால் நாட்களில் முதல் போட்டி முடியும் அளவுக்கு சமமின்றி இருந்த காபா கிரிக்கெட் மைதானம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து கடைசியில் ஐசிசியிடம் ஒரு கருப்பு புள்ளியையும் தண்டனையாகப் பெற்றது.

அந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 2வது போட்டி துவங்கியது. முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு பின்தங்கிய தென்னாப்பிரிக்கா பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த நிலையில் கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாளன்று துவங்கிய இந்த “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

மும்பை ரசிகர்கள் ஹேப்பி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா இப்போட்டியிலும் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவிடம் ஆரம்பத்திலேயே திணறியது. குறிப்பாக தொடக்க வீரர் எர்வீ 18 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த டீ ப்ரோன் இளம் வீரர் கேமரூன் கிரீனிடம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கிடையே கேப்டன் டீன் ஏல்கர் 26 ரன்களில் ரன் அவுட்டான நிலையில் தெம்பா பவுமா 1, ஜோண்டோ 5 ஆகியோரை ஒற்றை இலக்க ரன்களில் மிட்சல் ஸ்டார்க் காலி செய்தார்.

அதனால் 67/5 என சரிந்த அந்த அணிக்கு 6வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய மார்கோ யான்சென் – கெய்ல் வேரின் ஆகியோரை முறையே 59, 52 ரன்களில் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாக்கிய கேமரூன் கிரீன் ரபாடா 4, லுங்கி நிகிடி 2 என டெயில் எண்டர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்தார். அதனால் தென்னாப்பிரிக்காவை 189 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 1 ரன்னில் ரபாடவிடம் அவுட்டானாலும் டேவிட் வார்னர் 32* ரன்களும் மார்னஸ் லபுஸ்ஷேன் 5* ரன்களும் எடுத்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

அப்போது 45/1 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இன்னும் 144 ரன்கள் பின்தங்கியுள்ளது. அப்படி விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ள இப்போட்டியின் முதல் நாளில் 5 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த கேமரூன் கிரீன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் இதுவரை 18 போட்டிகளில் 755 ரன்களையும் 23 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

குறிப்பாக நேற்று முன் தினம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற 2023 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 17.50 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த மகிழ்ச்சியோ என்னவோ தெரியவில்லை 18 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தியுள்ள அவர் ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன ஆஸ்திரேலிய வீரர் என்ற பட் கமின்ஸ் (15.50 கோடி) சாதனையை தகர்த்து புதிய பெருமையை பெற்றார்.

இதையும் படிங்க40 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடியும் என்ன பயன்? கே.எல் ராகுலின் தவறை சுட்டிக்காட்டிய – தினேஷ் கார்த்திக்

சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமையும் பெற்றிருப்பதால் ஓய்வு பெற்ற கைரன் பொல்லார்ட்டுக்கு மாற்று வீரராக பெரிய தொகையை செலவிட்டு மும்பை வாங்கியுள்ளது. அந்த நிலையில் தங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் சிறப்பாக செயல்பட்ட அவரைப் பார்த்து மும்பை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து சமூகவலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement