SRH vs MI : ஓப்பனிங் முக்கியமல்ல, முக்கிய நேரங்களில் சொதப்பிய ஹைதெராபாத்தை – பழைய ஃபார்மில் மும்பை ஹாட்ரிக் வெற்றி

SRH vs MI
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போதும் கேப்டன் ரோகித் சர்மா 6 பவுண்டரியுடன் 28 (18) ரன்களில் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய கேமரூன் கிரீன் அதிரடியாக செயல்பட்ட போதிலும் மறுபுறம் சற்று தடுமாற்றமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசான் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (31) ரன்களில் அவுட்டான போது அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 7 (3) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த இளம் வீரர் திலக் வர்மா 4வது விக்கெட்டுக்கு கேமரூன் கிரீனுடன் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 4 சிக்சருடன் 37 (17) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஹாட்ரிக் வெற்றி:
இறுதியில் டிம் டேவிட் 2 பவுண்டரியுடன் 16 (11) ரன்களில் அவுட்டானாலும் கடைசி வரை அவுட்டாகாத கேமரூன் கிரீன் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64* (40) ரன்கள் குவித்து சிறப்பான பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் மும்பை 192/5 ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணிக்கு கடந்த போட்டியில் சதமடித்த ஹரி ப்ரூக்கை இம்முறை 9 (7) ரன்களில் அவுட்டாக்கிய ஜேசன் பெரன்ஃடாப் அடுத்து வந்த ராகுல் திரிபாதியையும் 7 (5) ரன்களில் காலி செய்தார்.

அதனால் 25/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தனது அணியை அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்கம் மற்றொரு தொடக்க வீரர் மயங் அகர்வாலுடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்த போது 22 (17) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த இளம் வீரர் அபிஷேக் சர்மா 1 (2) ரன்னில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் அடுத்து வந்த ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக செயல்பட்டு 5வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போதிலும் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (16) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

போதாகுறைக்கு மறுபுறம் போராடிய மயங் அகர்வால் அதிரடியை துவக்க வேண்டிய கட்டாயத்தில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 48 (41) ரன்கில் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 5 ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 62 தேவைப்பட்ட போது இம்பேக்ட் வீரர் அப்துல் சமத் அதிரடி காட்ட முடியாமல் தவித்ததால் ஏற்பட்ட அழுத்தத்தில் எதிர்புறம் மார்கோ யான்சென் 3 பவுண்டரிகளுடன் 13 (6) ரன்களிலும் வாஷிங்டன் சுந்தர் 2 பவுண்டரிகளுடன் 10 (6) ரன்களிலும் அவுட்டாகி சென்றார்கள்.

இறுதியில் கடைசி ஓவரில் அப்துல் சமத் 9 (12) ரன்களில் ரன் அவுட்டாகி சென்ற நிலையில் புவனேஸ்வர் குமாரை 2 (5) ரன்களில் அவுட்டாக்கிய அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய முதல் விக்கெட்டை கலங்கிய கண்களுடன் பதிவு செய்தார். அதனால் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஹைதராபாத் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெரன்ஃடாப், பியூஸ் சாவ்லா, ரிலீ மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இப்போட்டியில் திலக் வர்மா – கேமரூன் கிரீன் ஆகியோர் டெத் ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுத்தது மும்பையின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

அதனால் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளுடன் இந்த சீசனை துவக்கிய மும்பை அடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று ஹாட்ரிக் வெற்றிகளுடன் பழைய ஃபார்முக்கு திருப்பியுள்ளது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: லண்டன் விஸ்டன் விருதுகள் : மிகப்பெரிய கெளரவத்தை பெற்ற சூரியகுமார் யாதவ் – வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கௌர்

மறுபுறம் பந்து வீச்சில் முக்கிய நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத் பேட்டிங்கில் பவர் பிளே ஓவர்களில் மும்பையின் தரமான பந்து வீச்சில் மெதுவாகவும் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து விக்கெட்டுகளை இழந்தும் பரிதாபமாக தோற்றது.

Advertisement