கையில் இருந்த வெற்றியை கடைசி ஓவரில் மும்பையிடம் கோட்டை விட்ட குஜராத் அணி – கடைசி ஓவரில் நடந்தது என்ன?

Rohit Sharma Hardik Pandya MI vs GT
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் மே 6-ஆம் தேதி நடைபெற்ற 51-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி இடத்தில் திண்டாடும் மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் ஆகியோர் இந்த முறை அதிரடியாக 74 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் கேப்டன் ரோகித் சர்மா 43 (28) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 13 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்த ஒருசில ஓவர்களில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (29) ரன்கள் எடுத்த இஷன் கிஷன் 12-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் 111/3 என்ற நிலையில் இருந்த மும்பைக்கு அடுத்து களமிறங்கிய அதிரடிக்கு பெயர் போன கைரன் பொல்லார்ட் 14 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகி மும்பை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

- Advertisement -

மும்பை 177:
அந்த நிலைமையில் 2 பவுண்டரியுடன் 21 (16) ரன்கள் எடுத்த இளம் வீரர் திலக் வர்மாவும் ரன் அவுட்டாகி சென்றதால் பின்னடைவை சந்தித்த மும்பையை கடைசி நேரத்தில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 44* (21) ரன்கள் விளாசிய டிம் டேவிட் அதிரடியான பினிஷிங் கொடுத்து காப்பாற்றினார். அதனால் 20 ஓவர்களில் மும்பை 177/6 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 178 என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத்துக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியை கையாண்டனர். 12 ஓவர்கள் வரை மும்பை பவுலர்களை நிதானமாகவும் அதிரடியாகவும் எதிர்கொண்ட இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சூப்பரான பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை கிட்டதட்ட உறுதி செய்தனர். அந்த நிலைமையில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 52 (36) ரன்கள் எடுத்திருந்தபோது தமிழக வீரர் முருகன் அஸ்வின் பந்தில் முதலில் சுப்மன் கில் அவுட்டாக அதே ஓவரில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (40) ரன்கள் எடுத்த சஹாவும் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பரபர போட்டி:
அப்போது களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 (11) ரன்களில் ஹிட் விகெட்டாகி சென்றார். அந்த சூழ்நிலையில் கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட போது 4 பவுண்டரிகளுடன் 24 (14) ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா ரன் அவுட்டானார். அந்த நேரத்தில் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது கடந்த போட்டிகளில் மிரட்டலாக பினிஷிங் கொடுத்த டேவிட் மில்லர் – ராகுல் திவாடியா ஜோடி களத்தில் இருந்ததால் குஜராத்தின் வெற்றி உறுதி என அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார்போல் பும்ரா வீசிய 19-வது ஓவரில் மில்லர் ஒரு சிக்சரை பறக்க விட்ட டேவிட் மில்லர் 10 ரன்களை விளாசினார்.

Hardik Pandya Run Out

அப்போதும் கூட குஜராத் வெற்றி என அனைவரும் நினைத்த வேளையில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது அதை டேனியல் சாம்ஸ் வீச முதல் 2 பந்துகளில் 1, 0 என 1 ரன் மட்டுமே எடுத்ததால் திடீரென குஜராத்துக்கு பிரசர் ஏற்பட்டது. அந்த பரபரப்பான தருணத்தின் 3-வது பந்தில் 2 ரன் எடுக்க முயன்ற ராகுல் திவாடியா 1 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அப்போது 3 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது 1, 0, 0 என 1 ரன்கள் மட்டுமே கொடுத்த டேனியல் சாம்ஸ் கடைசி ஓவரில் அற்புதமாக பந்துவீசி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

கையிலிருந்த வெற்றி:
கடந்த போட்டிகளில் மிரட்டிய டேவிட் மில்லர் இம்முறை 19* (14) ரன்கள் எடுத்த போதிலும் பினிஷிங் செய்ய முடியாமல் ஏமாற்றத்தை கொடுத்தார். இப்போட்டியில் பந்துவீச்சில் ஓரளவு அசத்திய குஜராத் சேசிங் செய்யும் போது சஹா – கில் ஆகியோரின் 106 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் காரணமாக நல்ல தொடக்கத்தை பெற்றதால் 19 ஓவர்கள் வரை வெற்றியை கையில் வைத்திருந்தது.

Mumbai Indians MI

ஆனால் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் திவாடியா ஆகியோர் ரன் அவுட்டானது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில் கடைசி ஓவரில் சொதப்பிய அந்த அணி கையில் இருந்த நல்ல வெற்றியை மும்பைக்கு பரிசளித்தது. இதனால் பங்கேற்ற 11 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்த குஜராத் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும் பந்துவீச்சில் அதுவும் கடைசி 2 – 3 ஓவர்களில் அபாரமாக செயல்பட்ட மும்பை ஏற்கனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை கோட்டை விட்டாலும் பங்கேற்ற 10 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்து ஆறுதல் அடைந்துள்ளது.

Advertisement