IPL 2023 : 808 நாட்கள் 2 வருடத்துக்கு பின் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா – கடைசி பந்து வரை போராடிய மும்பை சாதனை வெற்றி

- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11 தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு அதிரடியாக விளையாட முயன்ற பிரித்திவி ஷா 3 பவுண்டரியுடன் 15 (10) ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டேவும் அதிரடியாக விளையாட முயற்சித்து 5 பவுண்டரியுடன் 26 (18) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் டேவிட் வார்னரின் நிதான ஆட்டத்தால் டெல்லி 76/2 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால் அப்போது மிடில் ஓவரில் மாயாஜாலம் நிகழ்த்திய பியூஸ் சாவ்லா தன்னுடைய அடுத்தடுத்த 3 ஓவர்களில் யாஷ் துல் 2 (4) ரோவ்மன் போவல் 4 (4) லலித் யாதவ் 2 (4) என 3 முக்கிய வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதனால் 98/5 என சரிந்த டெல்லியை அடுத்து களமிறங்கிய அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 6வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 5 சிக்சருடன் 54 (25) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் தடுமாறிய டேவிட் வார்னர் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 6 பவுண்டரியுடன் 51 (47) ரன்களில் அவுட்டாக எஞ்சிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 19.4 ஓவரில் டெல்லி 172 ரன்களுக்கு அவுட்டானது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் ஜேசன் பெரன்ஃடாப் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய மும்பைக்கு முதல் ஓவரிலேயே 6, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட ரோகித் சர்மா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.

அவருடன் தனது பங்கிற்கு அதிரடி காட்ட முயற்சித்த இசான் கிசான் 71 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் 6 பவுண்டரியுடன் 31 (26) ரன்கள் எடுத்து அவசரப்பட்டு ரன் அவுட்டாகி சென்றார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோகித் சர்மா 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக அரை சதமடித்து நிம்மதியடைந்தார். கடைசியாக கடந்த 2021 சீசனில் அரை சதமடித்திருந்த அவர் 2022 சீசனில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

இருப்பினும் 808 நாட்கள் கழித்து 24 இன்னிங்ஸ் கழித்து இப்போட்டியில் அதை உடைத்த அவருடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை வெற்றி பாதைக்கு அழைத்து வந்த இளம் வீரர் திலக் வர்மா 1 பவுண்டரி 4 சிக்சருடன் 41 (29) ரன்கள் குவித்து தனது வேலையை செய்து ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டாகி சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டானதிலிருந்து இன்னும் முன்னேறவில்லை என்பதை காண்பித்து ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தார்.

அடுத்த ஓவரிலேயே ரோகித் சர்மாவும் 6 பவுண்டரின் 4 சிக்ஸருடன் 65 (45) ரன்களில் அவுட்டானது மும்பை ரசிகர்களை கலங்கடித்தது. இருப்பினும் அடுத்து வந்த கேமரூன் கிரீன் அதிரடியை காட்டியதால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆன்றிச் நோர்ட்ஜே வீசிய அந்த ஓவரின் முதல் 5 பந்தில் 1, 0, 0, 1, 1 என மும்பை 3 ரன்கள் எடுத்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கடைசி பந்தில் டைவ் அடித்து 2 ரன்கள் அடித்த டிம் டேவிட் 13* (11) ரன்களும் க்ரீன் 17* (8) ரன்களும் எடுத்து மும்பையை 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

குறிப்பாக டெல்லிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 170க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக துரத்தி மும்பை சாதனை வெற்றி பெற்றது. இதற்கு முன் 170+ ரன்களை துரத்திய 4 போட்டிகளிலும் மும்பை தோற்றது. முன்னதாக இந்த போட்டியில் டேவிட் வார்னர் மெதுவாக பேட்டிங் செய்ததும் மிடில் ஆர்டரில் பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகளை எடுத்ததும் இறுதியில் டெல்லி வேகமாக ரன்களை எடுக்க முயற்சித்து ஆல் அவுட்டானதும் எக்ஸ்ட்ரா 20 – 30 குவிப்பதை தடுத்தது.

இதையும் படிங்க: எனக்கு இருந்த கஷ்டம் எல்லாம் ஐ.பி.எல் தொடரால் தான் தீர்ந்தது. வறுமையை வென்ற – கொல்கத்தா நாயகன்

அப்படி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட மும்பைக்கு நீண்ட நாட்கள் கழித்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 17 ஓவர்களை வரை நிலைத்து பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா இந்த சீசனில் முதல் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் டெல்லி 4 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

Advertisement