வேற வழியே இல்ல, ஐபிஎல்’லை கேன்சல் செய்யுங்க – ஜோடியாக ட்ரெண்ட் செய்யும் சென்னை, மும்பை ரசிகர்கள்

CskvsMi
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வரத்தைக் கடந்து பல பரபரப்பான திரில்லர் தருணங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி கோலாகலமாக துவங்கி மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன.

பொதுவாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் இந்த வருடம் வீரர்களின் நலன் கருதி மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. இதைப் பார்க்க 25 – 50% அளவிலான ரசிகர்கள் மட்டுமே மைதானத்திற்குள் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

டெல்லியில் பிரச்சனை:
எதற்கு பயந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இந்த வருட ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தி வருகிறதோ அந்தப் பிரச்சினை மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளது. அதாவது கடந்த வருடம் ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா அணியில் ஒரு சில வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா காரணமாக மொத்த தொடரும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு அதன்பின் பல தடைகளை கடந்து துபாயில் நடைபெற்று முடிந்தது. அதுபோன்ற ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்கவே இம்முறை ஒருசில நகரங்களில் மட்டும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பயிற்சியாளர் மற்றும் ஒருசில வீரர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் அடுத்த போட்டி நடைபெறும் புனே நகருக்கு செல்வதை தவிர்த்து அந்த அணி நிர்வாகம் அனைவரையும் ஹோட்டலில் தனிமைப் படுத்தியது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உள்ளிட்ட 4 பேருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள் என தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் கூட இதர பாதிக்கப்படாத வீரர்களுடன் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

- Advertisement -

கேன்சல் பண்ணுங்க:
அதன் காரணமாக திட்டமிட்டபடி ஐபிஎல் 2022 தொடர் தொடர்ந்து இந்தியாவிலேயே வெற்றிகரமாக நடைபெறும் என உறுதியாக நம்பப்படுகிறது. ஆனால் டெல்லி அணியில் தற்போது நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை பெரிய அளவில் மாறி பிரச்சனையை ஏற்படுத்தவதற்கு முன்பாகவே ஐபிஎல் 2022 தொடரை பாதுகாப்புடன் ரத்து செய்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலனை பிசிசிஐ காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் “கேன்சல்ஐபிஎல்” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட்டாகி வருகிறது.

அந்த அளவுக்கு நிலைமை ஒன்றும் மோசமாக சென்று விடாத நிலையில் இப்படி ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருவது ஐபிஎல் நிர்வாகத்திற்கும் பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் இதை யார் ட்ரெண்ட் செய்கிறார்கள் என்று சற்று உள்ளே புகுந்து உற்றுப் பார்க்கும் போது நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகிய 2 அணி ரசிகர்களும் சேர்ந்து இந்த வேலையை செய்து வருவதுதான் சிரிப்பை உண்டாக்குகிறது.

- Advertisement -

கைகோர்த்த சென்னை – மும்பை:
ஏனெனில் இவ்விரு அணிகளுமே தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் அதல பாதாளத்தில் திண்டாடுகின்றன. அதிலும் குறிப்பாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 6 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் தவிக்கிறது. தற்போதைய நிலைமையில் அடுத்த 8 போட்டிகளில் அந்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் செல்வதற்கு 99% வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்தை பெயரில் மட்டும் வைத்துக் கொண்டு மோசமாக விளையாடி வரும் சென்னை இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5 தோல்விகளையும் 1 வெற்றியையும் மட்டுமே பெற்று 9-வது இடத்தில் திண்டாடுகிறது. இனியும் அந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட அசாத்தியமாகியுள்ளது. மறுபுறம் நேற்று முளைத்த காளான்களாக கருதப்படும் குஜராத், லக்னோ போன்ற புதிய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் ஜொலிக்க பெங்களூரு போன்ற இதுவரை ஒரு கோப்பையை வெல்லாத அணிகள் கூட தொடர் வெற்றிகளால் டாப் இடங்களில் மின்னுகின்றன.

- Advertisement -

எனவே மோசமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சை வைத்துக் கொண்டு தங்களது அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்த இந்த இரு அணி ரசிகர்களும் இப்போது ஒன்றாக ஜோடி சேர்ந்து இந்த ட்ரெண்டிங்கை செய்து வருவது வினோதமாக உள்ளது. ஒரு காலத்தில் முதல் இடத்திற்காகவும் கோப்பைக்காகவும் களத்திலும் சமூக வலை தளங்களிலும் மல்லுக்கட்டிய இந்த இரு அணி ரசிகர்கள் தற்போது இதுபோன்ற விஷயத்திற்கு ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை பார்க்கும் போது ஒருபுறம் கலகலப்பாக இருந்தாலும் மறுபுறம் பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணி அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பே இல்ல – நட்சத்திர வீரர் மருத்துவமனையில் அனுமதி

ஆனால் மறுபுறம் சிறப்பாக செயல்படும் குஜராத், லக்னோ, பெங்களூர் போன்ற அணி ரசிகர்கள் இந்த ஐபிஎல் தொடர் எப்படியாவது நடந்தே தீரவேண்டும் என்று அதற்கு எதிராக ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement