
இந்தியாவில் புகழ்பெற்ற ரஞ்சிக் கோப்பையின் 2025 – 26 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் 8ஆம் தேதி சூரத் நகரில் உள்ள பிம்பூரில் பிளேட் குரூப்பில் இடம் வகிக்கும் அருணாச்சலப்பிரதேசம் – மேகாலயா அணிகள் மோதிய போட்டித் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மேகாலயா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 628/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் அர்பித் பட்டேவரா இரட்டை சதத்தை அடித்து 207 ரன்கள் குவித்தார். அவருடன் அர்ஜுன் துகான் 53 ரன்கள், கேப்டன் கிசான் லிங்க்டோ சதத்தை அடித்து 119 ரன்கள் குவித்தார்.
அதே போல ராகுல் டலால் 12 பவுண்டரி 9 சிக்ஸரை பறக்க விட்டு சதத்தை அடித்து 144 (102) ரன்களை விளாசி அவுட்டானார். அவர்கள் அனைவரையும் விட 8வது இடத்தில் களமிறங்கிய ஆகாஷ் சௌத்ரி எரிமலையாக பேட்டிங் செய்து 50* (14) என்றே சொல்லலாம். குறிப்பாக அருணாச்சல பிரதேச ஸ்பின்னர் லிமர் தபி வீசிய 126வது ஓவரில் 6, 6, 6, 6, 6, 6 என 6 பந்துகளில் அவர் கவர்ஸ் முதல் மிட் விக்கெட் திசைக்கிடையே 6 சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்தினார்.
அதனால் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 3வது வீரர் என்ற உலக சாதனையை ஆகாஷ் சௌத்ரி படைத்தார். இதற்கு முன் 1968ஆம் ஆண்டு கிளாமோர்கனுக்கு எதிரான கவுன்டி போட்டியில் நாட்டிங்கம்ஷைருக்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேர்ஃபீல்ட் சோபர்ஸ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார். 1985 ரஞ்சிக் கோப்பையில் பரோடாவுக்கு எதிராக பாம்பே கிரிக்கெட் அணிக்காக இந்தியாவின் ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
அவர்களுக்குப் பின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை வெளுத்த ஆகாஷ் சௌத்ரி அடுத்த ஓவரின் முதல் 2 பந்துகளிலும் சிக்சரை அடித்தார். அதன் வாயிலாக முதல் தர கிரிக்கெட்டில் 8 பந்துகளில் தொடர்ந்து 8 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். அத்துடன் 11 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் முதல் தர கிரிக்கெட்டில் வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.
இதையும் படிங்க: 2012இல் பறிக்கப்பட்ட அப்பாவின் போலீஸ் வேலையை.. மீட்டுக் கொடுத்த இந்திய வீராங்கனை.. வேற லெவல் சம்பவம்
இதற்கு முன் 2012இல் எசக்எஸ் அணிக்கு எதிரான கவுன்டி போட்டியில் லீசஸ்டர்ஷைர் வீரர் வேன் ஒய்ட் 12 பந்துகளில் 50 அடித்ததே முந்தைய சாதனை. அடுத்து விளையாடிய அருணாச்சல 73 ரன்களுக்கு சுருட்டிய மேகாலயா மீண்டும் ஃபாலோ ஆன் கொடுத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் விளையாடும் அருணாச்சல பிரதேசம் 2வது நாள் முடிவில் 29/3 என திண்டாடி வருகிறது.