
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் 2025/26 கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா 3 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. அத்துடன் தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஆஷஸ் கோப்பையில் வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்தது.
மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி இம்முறை ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து 11 நாட்களில் படுதோல்வியைச் சந்தித்தது. அத்துடன் 2010/11க்குப்பின் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 15வது வருடமாக வெறும் ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து தலை குனிந்தது. அந்த சூழ்நிலையில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 5:00 மணிக்கு புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது.
அந்தப் போட்டி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான இன்று விடுமுறை தினத்தில் பாக்ஸிங் டே போட்டியாக நடைபெற்றது. அதனால் அந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கடைசியில் பார்த்தால் போட்டியைக் காண்பதற்கு 94,199 ரசிகர்கள் வந்துள்ளதாக மெல்போர்ன் மைதான நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் உலகிலேயே மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் அதிக ரசிகர்கள் திரண்ட போட்டியாக இந்தப் போட்டி சாதனை. இதற்கு முன் ஐசிசி 2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து மோதிய இறுதிப்போட்டியைக் காண்பதற்கு மெல்போர்ன் மைதானத்திற்கு 93,013 ரசிகர்கள் வந்ததே முந்தைய சாதனையாகும். அந்த 10 வருட சாதனையை இப்போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்தைச் சேர்ந்த ரசிகர்கள் முறியடித்தனர்.
அந்த சூழ்நிலையில் நடைபெற்ற போட்டியில் சரியாக பிற்பகல் 3.50 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரும் தங்களது தலையில் அணிந்திருந்த தொப்பியை கழற்றி மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள். வரலாற்றின் மகத்தான ஸ்பின் பவுலராக போற்றப்படும் வார்னே மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர். அத்துடன் 350வது நம்பர் தொப்பியை அணிந்து விளையாடிய அவர் 708 விக்கெட்டுகளை எடுத்து ஸ்பின் பவுலிங் துறையில் புரட்சியை ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவின் ஏராளமான வெற்றிகளில் பங்காற்றினார்.
இதையும் படிங்க: வெறும் 110க்கு அவுட்.. பஸ்பாலுக்கு முடிவுரை எழுதும் ஆஸி? இங்கிலாந்து படைத்த மோசமான சாதனையால் பின்னடைவு
அத்துடன் ஷேன் வார்னே தம்முடைய தொப்பியை கழற்றி ரசிகர்களுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். எனவே சரியாக 3.50 மணிக்கு ரசிகர்களும் வர்ணனையாளர்களும் அவரைப் போலவே கொண்டாடி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில் இந்த வருடம் பாக்ஸிங் டே மெல்போர்ன் போட்டி மறக்க முடியாத வகையில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.