இந்திய கிரிக்கெட் அணிக்காக இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங் யாதவ் டி20 போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான அவர் தொடர்ச்சியாக 155கி.மீ வேகத்தில் பந்து வீசினார். நல்ல லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றி மிரட்டலாக பந்து வீசிய அவர் தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்தார்.
அதன் பின் காயமடைந்த அவர் தற்போது மீண்டும் இந்தியாவுக்காக வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகியுள்ளார். அந்த வாய்ப்பில் முதல் ஓவரிலேயே மெய்டன் போட்ட மயங் யாதவ் நன்றாகவே விளையாடினார். அதனால் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட அவரை இந்திய அணிக்காக தேர்வு செய்யலாம் என்ற பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன.
அவசரம் வேண்டாம்:
இந்நிலையில் மயங் யாதவ் இன்னும் உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய விளையாடி முன்னேற்றத்தை காண வேண்டியுள்ளதாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். அதற்குள் ஆஸ்திரேலியா போன்ற சவாலான நாட்டில் விளையாட வைத்து அவரை வீணடித்து விடக்கூடாது என்றும் ஆர்பி சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக கடந்த இங்கிலாந்து மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடரில் அசத்திய ஆகாஷ் தீப்பை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசிய போது தம்மிடம் துல்லியம் இருப்பதாக மயங் யாதவ் காண்பித்துள்ளார். அதை தனது வேகத்துடன் அவர் முக்கியமாக கண்காணித்து வருகிறார். முதல் போட்டியிலேயே அவரைப் போன்ற அறிமுக வீரருக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கலாம். எனவே அவரிடம் நான் உச்சகட்ட செயல்பாடுகளை எதிர்பார்க்கவில்லை”
பொருத்தமான ஆகாஷ் தீப்:
“அதே சமயம் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டதற்கான நோக்கத்தில் அவர் அசத்தியுள்ளார். முதல் போட்டியிலேயே வேகத்துடன் துல்லியமாக வீச முடியும் என்பதை காண்பித்துள்ளார். முதல் போட்டியில் அவர் நன்றாகவே செயல்பட்டார். இருப்பினும் இன்னும் முன்னேறுவதற்கு நிறைய இடங்கள் உள்ளது. என்னை பொறுத்த வரை சீம் பகுதிகளை பயன்படுத்தி பந்து வீசும் ஸ்டைலை கொண்ட ஆகாஷ் தீப் ஆஸ்திரேலியாவுக்கு பொருத்தமானவர்”
இதையும் படிங்க: சுயநலம் பரவால்ல.. இந்தியாவின் சச்சினை முந்தப்போகும் ரூட்டை யாராலும் தொட முடியாது.. பென் ஸ்டோக்ஸ்
“மயங் யாதவிடம் வேகம் உள்ளது. ஆனால் அது மட்டுமே முக்கியமில்லை. வேரியேஷன் உட்பட அதில் முன்னேற வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன. தற்போது அவர் முன்னேற்றப் பாதையில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான பளு ஏற்படும். அதை சமாளித்து அசத்துதற்கு அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட நேரம் உள்ளது. ஷமி, ஆகாஷ் தீப் உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய விளையாடியுள்ளனர்” என்று கூறினார்.



