வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சார்பாக இளம் வேகப்பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்படி இந்த தொடரில் தனக்கு கிடைத்த அறிமுக வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளார் என்றே கூறலாம்.
மாயங்க் யாதவ் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
ஏனெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய அவர் 32 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இப்படி இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் அவரது வேகம், துல்லியம் மற்றும் ரன்களை குறைவாக கொடுக்கும் திறன் என பல விடயங்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அதோடு இனி இவருக்கு தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆதரவும் பெருகி வருகிறது.
இந்நிலையில் நேற்றைய வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக அவர் மிகச்சிறப்பான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது இந்த போட்டியின் முதலில் விளையாடிய இந்திய அணி 297 ரன்களை குவிக்க பின்னர் சேசிங்கை வங்கதேச அணி துவங்கிய போது அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான ஹுசைன் இமாமை முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக புவனேஸ்வர் குமார், ஹார்டிக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவர் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தியிருந்த வேளையில் தற்போது தான் அறிமுகமான தொடரிலேயே நான்காவது இந்திய வீரராக மாயங்க் யாதவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அந்த 2 பேரின் சுதந்திரம் தான் எல்லாத்தும் காரணம்.. மகிழ்ச்சியா இருந்தா தானா வரும்.. தொடர்நாயகன் பாண்டியா
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகி இதே ஆண்டு இந்திய அணிக்காகவும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி அடுத்ததாக நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான டிராவலிங் ரிசர்வ் வீரராகவும் அவர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



