தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது ஆஸ்திரேலியா அணியானது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.
டி20 உலககோப்பையில் என்னோட ஆசை இதுதான் : கிளென் மேக்ஸ்வெல்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த டி20 தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த மூன்றாவது டி20 போட்டியானது இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் கிளென் மேக்ஸ்வெல் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் தனது திட்டம் குறித்து சில விருப்பங்களை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது :
எதிர்வரும் டி20 உலககோப்பை தொடரில் நான் பவர்பிளே ஓவர்களின் போது பந்துவீச விரும்புகிறேன். ஏனெனில் இந்திய துணை கண்டத்தில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் முன்கூட்டியே பந்து வீசினால் அது நமக்கு சாதகமாக இருக்கும். எனவே அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை வைத்து நான் பவர்பிளே ஓவர்களில் பந்துவீச விரும்புகிறேன். புதிய பந்தில் நூல் புதியதாக இருக்கும் என்பதனால் நன்கு கிரிப் செய்தும் வீச முடியும். அந்த சாதகத்தை பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
எப்பொழுதுமே எனக்கு பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் பிடிக்கும். நான் எப்போது பந்துவீசி விக்கெட்டை கைப்பற்றினாலும் ஆச்சரியமடைவேன். டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும். அதனை எதிர்வரும் டி20 உலககோப்பை தொடரில் செய்ய விருப்பப்படுவதாக மேக்ஸ்வெல் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :
இதையும் படிங்க : டி20 உங்களுக்கு வேண்டாம்.. நீங்க அந்த வேலையை மட்டும் பாருங்க.. ஜெய்ஸ்வாலுக்கு – கட்டளையிட்ட நிர்வாகம்
தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகம் எந்த இடத்தில் என்னை பேட்டிங் செய்ய களமிறக்க விருப்பப்படுகிறதோ அந்த இடத்தில் விளையாட நான் தயாராக இருக்கிறேன். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக விளையாடினேன். தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பின்வரிசையில் விளையாடி வருகிறேன். அணிக்கு என்ன தேவையோ அதனை செய்ய நான் எப்போதுமே தயார் என கிளென் மேக்ஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது.



