ஒரு தசாப்தம் கழித்து ஐபிஎல் தொடரில் மீண்டும் கால்பதித்த வெளிநாட்டு வீரர் – இப்படியும் ஒரு சாதனையா

Matthew Wade
- Advertisement -

மும்பை நகரில் தொடங்கியுள்ள ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3-வது நாளான மார்ச் 28-ஆம் தேதி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் மோதின. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில் குஜராத் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Shami GT IPL 2022

- Advertisement -

முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இதற்கு முன் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதையடுத்து களமிறங்கிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158/6 ரன்களை போராடி எடுத்தது. ஏனெனில் அந்த அணியின் புதிய கேப்டன் கேஎல் ராகுல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாக அடுத்ததாக வந்த குயின்டன் டி காக் 7, மனிஷ் பாண்டே 6, எவின் லெவிஸ் 10 என டாப் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினார்.

குஜராத் அபார வெற்றி:
இதனால் 29/4 என அதிர்ச்சியான ஆரம்பத்தைப் பற்றி லக்னோ அணியை இளம் வீரர்கள் தீபக் ஹூடா 55 (41) ரன்களும் ஆயுஷ் படோனி 54 (41) ரன்களும் எடுத்து ஓரளவு மீட்டெடுத்தார்கள். கடைசி நேரத்தில் க்ருனால் பாண்டியா அதிரடியாக 21* (13) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தார். குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது சமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

LSG vs GT

அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் மேத்யூ வேட் 30 (29) ரன்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 (28) ரன்களும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக 30 (21) ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தாலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய ராகுல் திவாடியா 24 பந்துகளில் 40* ரன்களும் அபினவ் மனோகர் வெறும் 7 பந்தில் 15* ரன்களும் விளாசியதன் காரணமாக அதிரடியான வெற்றியைப் குஜராத் பெற்றது.

- Advertisement -

11 வருடங்கள் கழித்து மேத்தியூ வேட்:
முன்னதாக இந்த போட்டியில் 159 என்ற இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 15/2 என தடுமாறிய போது தாங்கிப் பிடித்த ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் மேத்யூ வேட் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட முக்கியமான 30 ரன்களை எடுத்து வெற்றிக்கு பங்காற்றினார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான இவர் ஒரு தசாப்தம் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடரில் கால்தடம் பதித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய அவர் அந்தச் சீசனில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசியாக விளையாடினார்.

Matthew Wade2

அதன்பின் கடந்த 11 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற முடியாமல் தவித்து வந்த அவர் தற்போது 3964 நாட்கள் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் விளையாடியபின் நீண்ட நாட்கள் கழித்து மற்றொரு போட்டியில் விளையாடிய வீரர் என்ற வித்தியாசமான சாதனையும் இவரின் பெயருக்கு சொந்தமாகி உள்ளது”. இவருக்கு அடுத்த 2-வது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த கோலின் இக்ராம் கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடி அதன்பின் 2864 நாட்கள் கழித்து கடந்த 2019-ஆம் ஆண்டு மீண்டும் டெல்லி அணி சார்பில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

எப்படி சாத்தியமானது:
கடந்த 2010-ஆம் ஆண்டு வாக்கில் இளம் வீரராக வலம் வந்த மேத்தியூ வேட் அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடி ஐபிஎல் தொடரிலும் கால்தடம் பதித்தார். ஆனால் அதன்பின் பெரிய அளவில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் ஆஸ்திரேலிய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட அவரை ஐபிஎல் தொடருக்கான ஏலத்திலும் யாரும் வாங்கவில்லை. அப்படியே காலங்கள் சுழன்றோடிக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 177 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 96/5 என தடுமாறியது.

wade

அப்போது களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி வெறும் 17 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 41* ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி வீசிய 19-வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க : அதற்காக எல்லாரும் வருத்தப்படுறாங்க ஆனால் அது என் மனதில் ரெக்கார்ட் ஆகிடுச்சு – ஜாம்பவான் கபில் தேவ்

அதன்பின் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அப்படி முக்கியமான நாக்-அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய காரணத்தால் மீண்டும் அனைவரின் கவனத்தை பெற்ற அவர் தற்போது 2.4 கோடி என்ற தொகைக்கு குஜராத் அணிக்காக விளையாடி சாதனை படைத்துள்ளார்.

Advertisement