
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டனர்.
அதனை தொடர்ந்து குரூப் பி பிரிவில் எந்த இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது குரூப் பி பிரிவில் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 273 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அட்டல் 85 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜாம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், டௌரிஸ் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. பின்னர் சில மணி நேரங்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் குளம் போல தேங்கியது. இதன் காரணமாக போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
அதனால் ஆஸ்திரேலிய அணி நான்கு புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரரான மேத்யு ஷார்ட் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஃபீல்டிங் செய்த அவர் காயம் அடைந்தார்.
இதையும் படிங்க : நம்மிடம் அப்படிப்பட்ட வீரர்களே கிடையாது.. பாகிஸ்தான் அணியின் பலவீனத்தை வெளிப்படுத்திய – ஷாஹித் அப்ரிடி
அதனால் அவர் அடுத்த போட்டியில் விளையாட முடியாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அப்படி அவர் காயம் காரணமாக அடுத்த போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக ஜாக் பிரேசர் மெக்கர்க் அடுத்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.