
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை எதிர்கொள்கிறது. இந்த வருடம் முதல் போட்டியில் வென்ற சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர்ச்சியானத் தோல்விகளை சந்தித்துள்ளது.
மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்றில் முதல் முறையாக சென்னை 3 தொடர்ச்சியான தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. காயத்தால் ருதுராஜ் விலகியதால் புதிய கேப்டன் தோனி தலைமையில் மீண்டும் சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று நம்பப்பட்டது. ஆனால் சேப்பாக்கத்தில் 20 ஓவரில் சென்னை அடித்த 103 ரன்களை கொல்கத்தா 10.1 ஓவரில் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
அந்தளவுக்கு போராடாமலேயே தோற்ற சென்னை அணி மிகப் பெரிய விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் லக்னோவுக்கு எதிரானப் போட்டியில் சென்னை வெற்றி பெறுமா என்பது கேள்வியாகும். மேலும் அடுத்தடுத்த தோல்விகளால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தோல்விகளால் பெரியளவில் மாற்றங்களை செய்யக்கூடிய தன்மை சிஎஸ்கே அணியின் டிஎன்ஏவில் இல்லையென்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். அதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அதே வீரர்களை வைத்து அரைத்த பைத்தியகாரத்தனமான மாவை அரைக்காதீர்கள் என்றும் ஹைடன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சென்னை அணியில் பெரிய மாற்றங்களை நாம் பார்ப்போம் என்று சந்தேகப்படுகிறேன். அது சிஎஸ்கே அணியின் டிஎன்ஏவில் இல்லை. உங்களுக்கு நீங்களே ஆதரவு கொடுத்து செயல்முறைகளை பின்பற்றுங்கள் என்பதே அவர்களுடைய அணுகு முறையாக இருக்கும். அவர்கள் பவர் பிளேவில் 60 ரன்கள் அடிக்கக்கூடிய அணியாக இல்லாமல் இருக்கலாம்”
இதையும் படிங்க: இப்போவும் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் ஆபத்தான வீரர் தோனி தான்.. அதுக்கு காரணமும் இருக்கு – ரிக்கி பாண்டிங் கருத்து
“ஆனால் அவர்கள் வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை மாற்றம் செய்யாமல் ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அவர்கள் அதை உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பது நிச்சயமற்றது. ஆனால் அவர்கள் ஏதாவது தெளிவாக மாற்ற வேண்டும்” என்று கூறினார்.