ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் முதல் போட்டியில் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே போல முகமது ஷமி காயத்தால் அந்தத் தொடரில் விளையாட தேர்வு செய்யப்படாததும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைய உள்ளது.
இந்நிலையில் அத்தொடரில் ஷமிக்கு பதிலாக ஆகாஷ் தீப் விளையாடுவதற்கு சரியானவர் இன்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளிலும் உள்ள உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் மோதுவதை நான் பார்க்க ஆவலுடன் உள்ளேன். இந்திய அணியில் ஷமிக்கு பதிலாக யார் விளையாடுவார் என்பது கேள்வியாக உள்ளது”
ஷமிக்கு பதிலாக:
“கடந்த முறை பெர்த் மைதானத்தில் அவர் அற்புதமாக பந்து வீசியது மட்டுமல்லாமல் மொத்த தொடரிலும் 22 என்ற சராசரியில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். தற்போதைய இந்திய அணியில் ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அவருக்கு பதிலாக விளையாட தேர்வாகியுள்ளார்கள்”
“சமீபத்திய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதில் பிரசித் கிருஷ்ணாவை பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். ஆனால் என்னைப் பொறுத்த வரை ஆகாஷ் தீப் தான் ஷமிக்கு பதிலாக விளையாடுவதற்கு மிகவும் சரியானவர். சொல்லப்போனால் அவரை விட ஆகாஷ் தீப் கொஞ்சம் உயரமானவர். எனவே முதல் 2 போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்”
இந்தியா – ஆஸ்திரேலியா:
“பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இரு அணிகளிலும் அதிரடியான வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிகப்படியான அழுத்தத்தில் எந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதை பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கும். அதே போல பெர்த் மைதானத்தில் நேதன் லயன் 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்”
இதையும் படிங்க: பெர்த் டெஸ்டில் 2008 சேவாக் மாதிரி.. அஸ்வினுக்கும் பதில் சுந்தரை எடுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“அதன் காரணமாக இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ய நினைக்கலாம். ஏனெனில் அவர் பேட்டிங்கை தாண்டி நேதன் லயன் போல ஓவர் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை ஆஸ்திரேலிய மைதானங்களில் கொண்டு வரும் திறமையுடையவர். அந்த வகையில் இந்த தொடரில் நாம் பார்ப்பதற்கு நிறைய அற்புதமான போட்டிகள் இருக்கிறது” என்று கூறினார்.



