இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20 முதல் துவங்கும் அந்தத் தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அதில் சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி களமிறங்குவதால் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஸ்விங், வேகத்துக்கு சாதகமான மைதானங்களைக் கொண்ட இங்கிலாந்தில் வெற்றி பெறுவதற்கு அனுபவம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இம்முறை ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே குறைந்த அனுபவத்தைக் கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்தில் ஓரிரு வெற்றிகளைப் பெறுவதே கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் பலவீனம்:
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுத் துறை பலமற்றதாக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக மார்க் வுட் முதல் 3 போட்டிகளில் காயத்தால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஜோப்ரா ஆர்ச்சர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கஸ் அட்கின்சன் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் இங்கிலாந்து அணியின் பௌலிங் துறை கொஞ்சம் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. இது போக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ராட் ஆகிய அனுபவ பவுலர்கள் இல்லாதது இந்தியாவுக்கு சாதகம் என்று ஹைடன் கூறியுள்ளார். அத்துடன் இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள லீட்ஸ் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் நிலவும் சூழ்நிலைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைடன் அட்வைஸ்:
எனவே அந்த 2 போட்டிகளை வெல்லும் பட்சத்தில் இந்தியா தொடரைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் ஹைடன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து பவுலர்கள் அந்தளவுக்கு சிறந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களிடம் நிறைய காயமடைந்த பவுலர்கள் உள்ளார்கள். அதே போல ஓய்வு பெற்ற பவுலர்களும் உள்ளார்கள்”
இதையும் படிங்க: 3-4 வருஷத்துல சாய் சுதர்சன் என்னை வியக்க வச்சிட்டாரு.. எவ்ளோ பேரு சொல்லிட்டாங்க – வாஷிங்டன் சுந்தர் பேட்டி
“அது சவாலாக இருக்கும். வடக்குப் பகுதியில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் நிலவும் சூழ்நிலைகள் சாவியாக இருக்கும். அங்கே வெற்றி பெறுவது தொடரை இந்தியாவின் வழியில் செல்வதற்கு வழி வகுக்கலாம்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



