பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. அக்டோபர் பதினாறாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. மேலும் நியூசிலாந்துக்கு எதிராகவும் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா பரிதாப சாதனை படைத்தது. விராட் கோலி, ராகுல், சர்பராஸ், அஸ்வின் டக் அவுட்டான இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 13, ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தனர்.
நியூஸிலாந்து அபாரம்:
மறுபுறம் அனல் தெறிக்க பந்து வீசிய நியூஸிலாந்துக்கு மாட் ஹென்றி 5, வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 180-3 ரன்கள் குறித்துள்ளது. கேப்டன் டாம் லாதம் 15, வில் எங் 33 ரன்களில் அவுட்டானாலும் டேவோன் கான்வே 91 ரன்கள் குவித்து அசத்தினார். களத்தில் ரச்சின் ரவீந்திரா 22*, டேரில் மிட்சேல் 14* ரன்களுடன் உள்ளனர்.
முன்னதாக இப்போட்டியில் இரண்டாவது நாள் காலையில் வானம் மேகமூட்டத்துடன் சூழ்நிலை நிலவியது. மேலும் பிட்ச் தார் பாயால் மூடப்பட்டிருந்ததால் இருந்ததை பயன்படுத்திய நியூசிலாந்து 46 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டியது. இந்நிலையில் சூழ்நிலைகளையும் தாண்டி ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடியது இப்போட்டியில் இந்தியாவை சுருட்ட உதவியதாக நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் அனுபவம்:
குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடியதால் இங்குள்ள சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள உதவியதாக
தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது போட்டியை துவக்குவதற்கு சிறப்பான வழி. பேட்டிங்கில் நாங்கள் அழுத்தத்தை ஏற்படுத்திய வழியும் நன்றாக இருக்கிறது. பிட்ச்சில் நிறைய புற்கள் நீக்கப்பட்டுள்ளது. காலையிலேயே எங்களுக்கு சூழ்நிலைகளில் நிறைய உதவி கிடைத்ததால் திட்டங்களை எளிமையாக பின்பற்ற விரும்புகிறோம்”
இதையும் படிங்க: இப்படி ஒரு மோசமான ஆட்டத்தையா ஆடுவீங்க? டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்திய – இந்திய அணி
“மிகவும் கட்டுப்பாட்டுடன் விளையாடினால் முன்னேற முடியும் என்பது எங்களுடைய சாவியாகும். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் விளையாடிய அனுபவம் ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும் போது உதவுகிறது என்று நினைக்கிறேன். போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இது போல ஒரு நாளில் அதிரடியாக செயல்படுவது முக்கியம். இந்தியாவில் விளையாடுவது எப்போதும் கடினமாகும்” என்று கூறினார்.



