
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் இந்த தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே இந்த டி20 தொடரை கைப்பற்றி விட்டது.
அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியானது நாளை ஜனவரி 31-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போட்டி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி போட்டி என்பதனால் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மாவை தடுத்து நிறுத்தி அவரை வீழ்த்துவது குறித்த திட்டத்தை தான் வைத்துள்ளதாக நியூஸிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் ஷர்மாவின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. இந்த தொடர் மட்டுமின்றி கடைசி இரண்டு ஆண்டுகளாகவே அவர் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் அவரது ஆட்டம் அதிரடியாக இருந்து வருகிறது. எந்தவொரு ஒரு பவுலருக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடி வரும் அவரை அழுத்தத்தில் வைக்க நான் ஒரு சில திட்டங்களை வைத்துள்ளேன்.
இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் அசத்தலான சாதனையை நிகழ்த்தி அசத்திய குவிண்டன் டி காக் – விவரம் இதோ
அந்த வகையில் இந்த ஐந்தாவது போட்டியில் அவருக்கு சவாலான இடங்களை கண்டறிந்து அங்கு பந்துவீச விரும்புகிறேன். போட்டியின் ஆரம்பத்திலேயே அவருக்கு எதிராக துல்லியமாக பந்து வீசினால் அவரது அதிரடியை தடுத்து நிறுத்தலாம். கடந்த போட்டியில் அவரை வீழ்த்தியது போன்றே இந்த கடைசி போட்டியிலும் அவருக்கு எதிராக துல்லியமான பந்தினை வீசி அவரை ஆட்டமிழக்க வைப்பேன் என மேட் ஹென்றி கூறியது குறிப்பிடத்தக்கது.