இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜூன் 16-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது.
அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி எட்டாவது விக்கெட்டை இழந்ததும் ஒன்பதாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் லையன் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ராபின்சன் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கண்டனத்தை பெற்ற வீரராக மாறினார்.
ஏனெனில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவை ஆட்டமிழக்க வைத்த போது மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வெளியேற்றிய அவர் ஆஸ்திரேலியா அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்களில் கம்மின்சை தவிர பின் வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் 11-வது இடத்தில் விளையாடும் வீரர்கள் தான் அவர்களை எளிதில் வீழ்த்தி விடுவேன் என்று கூறியிருந்தார். அதேபோன்று இந்த போட்டி முடிந்ததும் கவாஜாவை மோசமாக திட்டியது குறித்து பதிலளித்திருந்த ராபின்சன் கூறுகையில் :
நான் பேசியதை நினைத்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை. இது போன்ற முக்கியமான தொடரில் இப்படி நடப்பது இயல்புதான். ரிக்கி பாண்டிங் முதலிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் இதேபோன்று எங்களுக்கு எதிராக செய்துள்ளனர் என்று திமிராக பதிலளித்து இருந்தார். அவரது இந்த தொடர்ச்சியான மோசமான செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் கடும் கண்டனத்தை பெற்றது.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான வீரரான மேத்யூ ஹைடன் அவரை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் ஒரு உரையாடலின் போது பேசுகையில் : ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார் அவர் கிரிக்கெட்டில் மறக்ககூடிய ஒரு வீரராக மாறியுள்ளார். ஒன்றுமில்லாத அவரது 124 கிலோமீட்டர் பந்துவீச்சுக்கு அவர் பேசும் வாய் மிகவும் அதிகம் என்று சாடினார்.
இதையும் படிங்க : 2017லயே சேவாக் கோச், செலக்டரா வந்துருப்பாரு, நாங்க தான் மிஸ் பண்ணிட்டோம் – பிசிசிஐ நிர்வாகி வருத்தமான பேட்டி
அதனை கண்ட ஹீலி நீங்கள் யாரை கூறுகிறீர்கள்? ராபின்சனையா? என்று கேட்க ஹெய்டனும் அவரைப் போன்ற ஒருத்தரைத்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்கள் வழிக்கே வருகிறேன் என்று கூறியிருந்தார். இப்படி முதலாவது டெஸ்ட் போட்டியில் ராபின்சனின் மோசமான செயல்பாடு அனைவரது மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.