ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் சந்தித்த தோல்விகளால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்கா வெளியேறியதால் அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது. அந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் அணியாக பைனலுக்கு சென்று சாதனை படைத்துள்ளது. புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 152/4 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஃபின் ஆலன் 4, டேவோன் கான்வே 21, கிளென் பிலிப்ஸ் 6 என டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 49/3 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று தடுமாறிய அந்த அணிக்கு நான்காவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி வரை அதிரடி காட்டாமல் 46 (42) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருடன் அதிரடியாக செயல்பட்ட டார்ல் மிட்சேல் 3 பவுண்டரி 1 சிக்ருடன் 53* (35) ரன்களும் ஜிம்மி நீசம் 16* (12) ரன்களும் எடுத்தனர். அந்தளவுக்கு ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டு 20 – 30 ரன்களை சேமித்த பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
எவ்ளோ காசு கொடுத்தீங்க:
அதை தொடர்ந்து 153 ரன்கள் துரத்திய பாகிஸ்தானுக்கு சமீப காலங்களில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி பார்மை இழந்து சுமாரான பார்மல் தவிக்கும் கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி விஸ்வரூபம் எடுத்து 105 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதில் பாபர் அசாம் 53 (42) ரன்களும் முகமத் ரிஸ்வான் 57 (43) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இறுதியில் முகமது ஹாரிஸ் 30 (26) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். இப்படி கடைசி நேரத்தில் கொதித்தெழுந்து பைனலுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்றது போல் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இப்போட்டியில் 53 ரன்கள் எடுத்த பாபர் அசாம் மிட்சேல் சாட்னர் வீசிய 7வது ஓவரின் கடைசி பந்தை தவற விட்டதால் எல்பிடபிள்யூ முறையில் நியூசிலாந்து அணியினர் அவுட் கேட்டனர். இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்காததால் அதிருப்தியடைந்த நியூசிலாந்து டிஆர்எஸ் எடுத்தது. அதை சோதித்து பார்க்கப்பட்ட போது பந்து பிட்ச்சான பின் ஸ்டம்புக்கு மேலே சென்றதால் அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். ஏனெனில் போட்டி நடைபெற்ற சிட்னி மைதானத்தில் இப்போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த பிட்ச் அதிகமாக பவுன்ஸ் ஆகாமல் மெதுவாக இருந்தது.
அதனாலேயே கடைசி நேரங்களில் கடைசி நேரங்களில் ஸ்லோ பந்துகளை பயன்படுத்தி நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட விடாமல் பாகிஸ்தான் பவுலர்கள் மடக்கிப் பிடித்தனர். அதை விட பிட்ச் மெதுவாக இருக்கும் காரணத்தாலேயே முதல் இன்னிங்ஸில் 15வது ஓவரிலேயே வெண்மையான பந்து தேய்ந்து அழுக்காய் போனதாக வர்ணையாளர்கள் தெளிவு படுத்தியை போட்டியை நேரலையில் பார்த்த ரசிகர்கள் அறிந்தனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் பெர்த் மைதானத்தில் தான் இவ்வளவு பவுன்ஸ் இருக்கும் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இப்போட்டி சிட்னியில் தானே நடக்கிறது என்று வினவுகிறார்கள். அதனால் மெதுவாக இருந்த பிட்ச்சில் எப்படி திடீரென்று அந்த சமயத்தில் இவ்வளவு பவுன்ஸ் வந்தது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்களில் பவுன்ஸ் இருக்கும் என்று பேச்சு வாக்கில் சொல்லப்படும் கருத்து டிஆர்எஸ் டெக்னாலஜியில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்றும் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.
அதை விட இறுதியில் அவுட் கொடுக்கப்படாத காரணத்தால் அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று பாகிஸ்தானை நிறைய இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். ஏனெனில் இந்த தொடரில் விராட் கோலி மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக நடுவர்களும் ஐசிசியும் செயல்படுவதாக மனசாட்சியின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்திருந்தார்கள். அந்த நிலையில் அந்த இடத்தில் பாபர் அசாமுக்கு பதில் இந்திய பேட்ஸ்மேன் இருந்திருந்தால் இதைத்தானே சொல்லியிருப்பீர்கள் என்று தற்போது இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.



