இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. அத்தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணியாக கருதப்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற கடைசி 2 தொடர்களில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தியாவின் பலம்:
இருப்பினும் கடந்த தோல்விகளுக்கு இம்முறை பதிலடி கொடுத்து இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்தியா சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சு துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார்.
அதனாலயே தங்களுடைய சொந்த மண்ணில் கூட அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருப்பதாக லபுஸ்ஷேன் கூறியுள்ளார். ஆனால் இம்முறை இந்தியாவின் பலமான வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆஸ்திரேலியா அவர்களின் ஹாட்ரிக் வெற்றியை உடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்காக இப்போதே தயாராகி வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.
ஆஸ்திரேலியா வெல்லுமா:
“இந்த 2 அணிகள் ஒன்றாக விளையாடும் போது எப்போதுமே எனர்ஜி உச்சமாக இருக்கும். அந்த அணிகள் மோதும் போட்டிகள் இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து உட்பட எங்கு நடைபெற்றாலும் அதற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவே அவர்களை ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் முன்னிலைப்படுத்துகிறது”
இதையும் படிங்க: 350 ஓவர்ஸ்.. விராட் கோலி தான் ரோல் மாடல்.. இதுக்காக ஸ்பெஷலா எதுவும் பண்ணல.. ரியான் பராக் பேட்டி
“அதனாலேயே ஆஸ்திரேலியாவில் அவர்களை வீழ்த்துவது கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கோடைகாலத்தில் நாங்கள் மேஜையை இந்தியாவின் எதிர்புறமாக திருப்பி அவர்களை உண்மையான அழுத்தத்தின் கீழ் தள்ளி வெல்வோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த முறை 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.