ஐசிசி 2023 உலகக் கோப்பையை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வென்றது. அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பற்றி எதிரணிகளை சொல்லி அடித்தது. குறிப்பாக செமி ஃபைனலில் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்ததால் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் சதமடித்து 137 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மார்னஸ் லபுஸ்ஷேன் 58* (110) ரன்கள் அடித்தார். அதனால் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது உலகக் கோப்பையை வென்றது.
பேட்டுக்கு ஓய்வு:
மறுபுறம் அந்த தோல்வி கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அந்த நிலையில் 12000 ரசிகர்கள் முன்னிலையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து 2023 உலகக் கோப்பை வென்றது தமது கேரியரின் திருப்தியான வெற்றி என்று ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அது இந்திய ரசிகர்களை கடுப்பேற்றும் வகையில் அமைந்தது.
இந்த சூழ்நிலையில் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடிக்க உதவிய பேட்டுக்கு ஓய்வு கொடுப்பதாக மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த பேட்டை பயன்படுத்தி தொடர்ந்து விளையாடியதால் தற்போது சேதமடைந்துள்ள புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே மேற்கொண்டு பயன்படுத்தாமல் அதை நினைவுப் பரிசாக வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் லபுஸ்ஷேன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது உலகக் கோப்பை ஃபைனல் பேட்டுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் என நினைக்கிறேன்” என்று கண்கலங்கும் எமோஜியுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் அமைந்துள்ளது. அதனாலேயே இந்த பேட்டை நாங்கள் வெறுக்கிறோம், தோல்வியை ஏன் நினைவுபடுத்துகிறீர்கள் என்று அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலி மட்டுமல்ல.. தமிழக வீரரான அஷ்வினுக்கும் பறந்த மெசேஜ் – அவரும் ரெடியா இருக்கனுமாம்
இதற்கிடையே 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த வெற்றி 2023 உலகக் கோப்பை தோல்வியால் சந்தித்த வலிக்கு இந்திய ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்தது. இருப்பினும் 2003, 2023 தோல்விகளுக்கு என்றாவது 50 ஓவர் உலகக் கோப்பையிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.