Ashes 2023 : உள்ளே புகுந்து ட்விஸ்ட் கொடுத்த மழை, லபுஸ்ஷேன் அசத்தலில் போராடும் ஆஸி – பறிபோக தயாரான இங்கிலாந்தின் வெற்றி

Marnus Labuschange
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்டதால் விமர்சனத்திற்குள்ளான இங்கிலாந்து ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் பாகிஸ்தானை தோற்கடித்ததை போல இப்போதும் தங்களால் கொதித்தெழுந்து 3 – 2 என்ற கணக்கில் வெல்ல முடியுமென்று பென் ஸ்டோக்ஸ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அத்துடன் அவருடைய தலைமையில் தலைமையில் சொன்னது போலவே 3வது போட்டியில் அசத்திய இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று ஆஷஸ் கௌரவத்தை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலைமையில் ஜூலை 19ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கிய முக்கியமான 4வது போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. டேவிட் வார்னர் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 51, ஸ்மித் 41, டிராவிஸ் ஹெட் 48, மிட்சேல் மார்ஷ் 51 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை பெரிய ரன்களாக மாற்ற தவறினர்.

- Advertisement -

குறுக்கே வந்த மழை:
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 3வது போட்டியில் ஓய்வு கொடுத்திருந்த அதிரடி அணுகுமுறையை மீண்டும் கையிலெடுத்து 592 ரன்கள் குவித்து அசத்தியது. குறிப்பாக தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி அதிரடியாக 21 பவுண்டரி 3 சிக்சருடன் 189 (182) ரன்கள் எடுக்க மொய்ன் அலி 54, ஜோ ரூட் 84, ஹரி ப்ரூக் 61, பென் ஸ்டோக்ஸ் 51 என முக்கிய வீரர்கள் அனைவரும் நல்ல ரன்களை எடுத்தனர்.

அவர்களை விட 10 பவுண்டரி 4 சிக்சர்களை விளாசி ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய ஜானி பேர்ஸ்டோ டெயில் எண்டர்கள் கை கொடுக்க தவறியதால் 99* (81) ரன்களுடன் 1 ரன்னில் சதத்தை தவற விட்டு பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 275 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 18, டேவிட் வார்னர் 28, ஸ்டீவ் ஸ்மித் 17, டிராவிஸ் ஹெட் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 108/4 என சரிந்த ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது. அதன் காரணமாக இங்கிலாந்து முன்கூட்டியே வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 4வது நாளில் குறுக்கே வந்த மழை 70% ஆட்டத்தை தடுத்தது. ஒருவழியாக உணவு இடைவெளிக்கு பின் துவங்கிய ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மார்னஸ் லபுஸ்ஷேன் – மிட்சேல் மார்ஷ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தனர்.

அதில் சற்று நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடிய மார்னஸ் லபுஸ்ஷேன் 10 பவுண்டர் 2 சிக்ஸருடன் தம்முடைய 11வது டெஸ்ட் சத்தத்தை அடித்து ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்த போது 111 ரன்களில் ஜோ ரூட் சுழலில் சிக்கினார். அப்போது நிறைவுக்கு வந்த 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 214/5 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இன்னும் இங்கிலாந்தை விட 61 ரன்கள் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

களத்தில் மிட்சேல் மார்ஷ் 31* கேமரூன் கிரீன் 3* ரன்களுடன் இருப்பதால் இப்போட்டியில் ஆஸ்திரேலியா இன்னும் 62 ரன்கள் எடுத்து குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசி நாளில் மான்செஸ்டர் நகரில் 90 – 95% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வீடியோ : ஒருவழியாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய பெங்கால் வீரர் – யார் இந்த முகேஷ் குமார்?

இதன் காரணமாக கிட்டத்தட்ட போராடிக் கொண்டு வந்துள்ள வெற்றி இங்கிலாந்தின் கைக்கு கிடைக்காமல் போவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் அங்குள்ள வானிலை மாறக்கூடியது என்பதால் மழை வழி விட வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

Advertisement