ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற இந்தியா தயாராகி வருகிறது.
அதற்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்ல ஆஸ்திரேலியாவும் தயாராகி வருகிறது. குறிப்பாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா அடுத்தடுத்த கோப்பைகளை வென்றது. அதே போல இம்முறை இந்தியாவின் வெற்றி நடைக்கு முடிவு கட்ட ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.
விராட் கோலிக்கு சவால்:
இந்நிலையில் இந்திய தொடரில் விராட் கோலிக்கு எதிராக அதிரடியான பவுன்சர்களை பந்து வீச தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா – குயின்ஸ்லாந்து அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தோனி போல ஒரு ஃபீல்டரை நேராக நிறுத்தி மார்னஸ் லபுஸ்ஷேன் பந்து வீசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
அதே போன்ற திட்டத்தில் 135 கி.மீ வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீசி விராட் கோலியின் ஈகோவை தொட உள்ளதாக லபுஸ்ஷேன் சவால் விடுத்துள்ளார். இது பற்றி கிரேட் கிரிக்கெட்டர் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அங்கே என்ன செய்யப் போகிறீர்கள்? பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பவுலராக வந்து விராட் கோலிக்கு சவாலை தர விரும்புவீர்கள். மக்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்”
ஈகோவுடன் மோதல்:
“அங்கே நீங்கள் ஒருவரின் ஈகோவுடன் விளையாட முடியுமா? என்று பார்க்க வேண்டும். அதற்காக மார்னஸ் வீசும் பவுன்சர்களில் தடுமாறப் போகிறீர்களா என்பதையும் பார்க்க வேண்டும். அணிக்கு தேவைப்படும் போது நான் பந்து வீச தயாராக இருக்கிறேன். குறிப்பாக 135 கிலோமீட்டர் பவுன்சர் பந்தை வீச நான் விரும்புகிறேன். அந்த திறன் என்னிடம் இருக்கிறது”
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வெற்றியை பறிக்க ஆஸ்கர் நடிப்பை போட்ட டெல்லி வீரர்.. காலியான 4 புள்ளிகள்.. ரசிகர்கள் கோபம்
“இதுவரை அதிகபட்சமாக நான் 132 கி.மீ வேகத்தை தொட்டுள்ளேன். எனவே இன்னும் 3 கிலோ மீட்டர் மட்டுமே. அந்த வேகத்தை நான் உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் வெறுப்பார்கள்” என்று கூறியுள்ளார். இருப்பினும் 145 – 150 கி.மீ பவுன்சர் பந்துகளை வீசிய மிட்சேல் ஜான்சனுக்கு 2014லேயே விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தவர். அதனால் இவருடைய சவாலையும் விராட் கோலி உடைப்பார் என்று நம்பலாம்.



