
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
இந்த தொடரானது தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இருக்கும் வேளையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும் காத்திருக்கின்றன. இதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த நான்காவது போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான மார்னஸ் லாபுஷேன் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய தயாராக காத்திருக்கிறேன் என்றும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எனக்கு எதிராக அச்சுறுத்தலாக இருப்பார்கள் என தெரியவில்லை என்று சற்று கூடுதல் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :
மூன்றாவது போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எனக்கு அடுத்தடுத்த பந்துகளை வீசிக்கொண்டே இருந்தனர். மேலும் ஒரு பந்தினை நான் பேட்டிங் செய்துவிட்டு அடுத்த பந்திற்கு திரும்ப கூட அவர்கள் நேரம் கொடுக்கவில்லை. உடனே அடுத்தடுத்த பந்துகளை வீச ஆரம்பித்தார்கள். ஆகையால் எனக்கு சற்று அழுத்தம் இருந்தது. எனவே தான் நான் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ளும் முன்னர் சற்று கூடுதலான நேரத்தை எடுத்துக் கொண்டேன்.
இதையும் படிங்க : IND vs AUS : என்ன பண்ணாலும் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது. என்னடா இவருக்கு வந்த சோதனை – விவரம் இதோ
எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த பந்தினை எப்படி எதிர்கொள்ளலாம் என்று மட்டுமே யோசித்தேன். அந்த யுக்தி எனக்கு பெரிதும் உதவியது. இதனை நான்காவது போட்டியிலும் பயன்படுத்தி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்துவேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.