
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியை தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாக தவறவிட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார். ஆனால் அவரது செயல்பாடு இந்த தொடரில் மிகவும் மோசமாக உள்ளது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்சியிலும் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் போட்டியை டிரா செய்தாலும் அந்த போட்டியிலும் ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக மீண்டும் களமிறங்கிய அவர் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதோடு களத்திலும் கேப்டன்சியில் மந்தமாகவே காணப்பட்டார். அதன் காரணமாக விராட் கோலி பந்துவீச்சாளர்களை வழிநடத்தி விக்கெட்டுகள் விழ காரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில் இந்த தொடரில் பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மாவை நான் செலக்ட்ராக இருந்தால் நீக்கி விடுவேன் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான மார்க் வாக் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ரோகித் சர்மா மெல்போன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரன்களை அடிக்கவில்லை என்றால் நிச்சயம் அவரை சிட்னி டெஸ்ட்க்கு நான் அழைத்துச் செல்ல மாட்டேன். அதோடு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக பும்ராவை நியமித்துவிட்டு ரோஹித் சர்மாவை அணியிலிருந்து டிராப் செய்வேன். மேலும் உங்களுடைய கிரிக்கெட் கரியரின் முடிவு இதுதான் என்று ஒரு செலெக்டராக நான் திட்டவட்டமாக கூறிவிடுவேன் என்று மார்க் வாக் காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கடந்த முறை “காபா” சேஸ் வெற்றி.. இந்த முறை “மெல்போர்ன்” சேஸ் வெற்றி – வரலாறு படைக்குமா இந்தியா?
அவர் கூறியது போலவே ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய 14 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 11 ரன்கள் சராசரியை மட்டுமே வைத்துள்ளார். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் பல்வேறு இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் 37 வயதான ரோஹித் சர்மா ஒரு இடத்தை இப்படி வீணடித்து தவறு என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.