
நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், விராட் கோலி ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படுகிறார்கள். அதில் இந்தியாவை சேர்ந்த விராட் கோலி 9000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் 2021க்குப்பின் அபாரமாக விளையாடி சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் குவித்து அசத்தி வருகிறார்.
அதே போல ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பெயரெடுக்கும் அளவுக்கு தங்களுடைய நாடுகளுக்காக விளையாடி வருகிறார்கள். தற்போது அவர்களும் 35 வயதை தாண்டி விட்டதால் இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலையில் அடுத்த தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது.
அதற்கு இந்தியாவை சேர்ந்த சுப்மன் கில், இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக், நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் வருங்காலத்தில் அசத்துவார்கள் என்று நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை இந்தியாவின் யசஸ்வி ஜெய்ஸ்வால் உலகின் அடுத்த சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக வருவார் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் மார்க் வாக் கணித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் 3 வீரர்கள் ஓட்டத்தில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஜெய்ஸ்வால், ஹாரி ப்ரூக் மற்றும் நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அசத்துகிறார்கள். அவர்களில் நான் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்கிறேன். 24 வயதாகும் அவர் ஏற்கனவே இரட்டை சதமடித்து 50க்கும் கீழே சராசரியைக் கொண்டுள்ளார்”
“இந்தப் பையனிடம் ஏதோ ஒரு ஸ்பெஷலான திறமை இருக்கிறது. எனவே உயரிய குழுவில் அடுத்த சாம்பியன் பேட்ஸ்மேனாக நான் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்கிறேன். அவரை பாருங்கள். அவர் மிகவும் சிறந்த வீரர். எனவே அந்த இளம் இந்தியரை நான் அடுத்த சாம்பியன் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: நீங்க என்ன என்னை நீக்குவது? வங்கதேசத்துக்கு நான் வரல.. இந்திய தொகுப்பாளினி பதிலடி அறிவிப்பு
அவர் கூறுவது போல 2023ஆம் ஆண்டு அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபித்துள்ளார். குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். எனவே வருங்காலங்களில் அனுபவத்தைப் பெற்று ஜெய்ஸ்வால் இன்னும் சிறந்த பேட்ஸ்மேனாக முன்னேறுவார் என்று நம்பலாம்.