இந்திய கிரிக்கெட் அணி நம்பிக்கை நாயகன் விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். சமீப காலங்களாகவே தடுமாறி வந்த அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்தார். ஆனால் அதற்கடுத்தப் போட்டிகளில் தொடர்ச்சியாக அவுட் சைட் ஆஃப் சைட் பந்துகளில் தம்முடைய விக்கெட்களை இழந்த அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
அதனால் அடுத்த இங்கிலாந்து தொடரில் அவரையும் அவரை விட மோசமாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் 2012 – 2021 வரை ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது விராட் கோலியிடம் வெற்றிக்காக சண்டையிடும் போட்டித்தன்மையைப் பார்த்ததாக மார்க் டெய்லர் கூறியுள்ளார்.
கோபமே காரணம்:
ஆனால் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலியிடம் போட்டித்தன்மைக்கு பதில் தேவையற்ற கோபத்தைப் பார்த்ததாக அவர் கூறியுள்ளார். அதுவே விராட் கோலி திடீரென ஓய்வு பெற காரணம் என்று தெரிவிக்கும் மார்க் டெய்லர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் நான் விராட் கோலியை வித்தியாசமாகப் பார்த்தேன்”
“அத்தொடரில் அவர் கோபமானவராக இருந்தார். அப்படிப்பட்ட விராட் கோலியை இதற்கு முன் பார்த்ததில்லை. இதற்கு முன் மிகவும் போட்டித் தன்மையை மிகுந்த விராட் கோலியை பார்த்துள்ளேன். அதை நானும் விரும்புகிறேன். அவரிடம் ஜென்டில்மேனை பார்த்தேன். ஆனால் கடைசித் தொடரில் வித்தியாசமான விராட் கோலியை பார்த்ததால் இதுவே அவர் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தேன்”
2014 மாதிரி இல்ல:
“அதையே விராட் கோலி செய்துள்ளார். ஏனெனில் நீங்கள் ஒரு முறை கோபமடைந்து விட்டால் அங்கிருந்து வெளியேற வேண்டும். விராட் கோலி அதை உணர்ந்து விட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் கோபப்படத் துவாங்கினால் முடிந்து விட்டதாக அர்த்தம். பல ரசிகர்களைப் போலவே கடந்த தொடரில் விராட் கோலி விளையாடுவதைப் பார்த்து நான் ஏமாற்றத்தை சந்தித்தேன்”
இதையும் படிங்க: விராட் கோலிக்கு பின் அவர் தான் இந்தியாவின் அடுத்த சச்சின்.. இளம் வீரரை பாராட்டிய இங்கிலாந்து வீரர்
“ஏனெனில் நானும் அவரது ஆட்டத்தை ரசிக்கக்கூடிய ரசிகன். பல வருடங்களுக்கு முன்பாக அவரை நேரடியாக பேட்டி எடுக்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது ஒரு காரணத்தால் அந்த பேட்டி பாதியிலேயே தடைப் பட்டது. ஆனால் அதையும் தாண்டி முழுமையாக பேட்டிக் கொடுத்த அவர் எனக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் மரியாதையைக் கொடுத்தார். அந்த பேட்டியில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவதே தம்முடைய இலக்கு என்று விராட் கோலி கூறியிருந்தார்” என தெரிவித்தார்.



