ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்து முடிந்தது. அந்தத் தொடரில் பஞ்சாப்பை தோற்கடித்த பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் ராஜஸ்தான், சென்னை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடத்தைப் பிடித்து பரிதாபமாக வெளியேறின.
இருப்பினும் அந்த அணிகள் அடுத்த வருடம் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பதற்காக தரமான இளம் வீரர்கள் கிடைத்தனர். குறிப்பாக ராஜஸ்தானுக்காக அறிமுகமான 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி முதல் பந்திலேயே சிக்சரை பறக்க விட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதை விட குஜராத்துக்கு எதிரான மிரட்டலாக விளையாடிய அவர் 38 பந்துகளில் சதத்தை அடித்தார்.
அடுத்த சச்சின்:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற 2 சாதனைகளை அவர் படைத்தார். இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வுக்குப் பின் இந்தியா அடுத்த சச்சின் டெண்டுல்கராக 14 வயது வைபவ் சூர்யவன்சியை கண்டறிந்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ரியான் சைட்பாட்டம் தெரிவித்துள்ளார். இது பற்றி போய்ல்ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“அது இது அற்புதமானது அல்லவா? இந்தியாவில் இருப்பவர்களுக்கு கிரிக்கெட் என்பது அனைத்துமாகும். இங்கிலாந்தில் இருக்கும் கால்பந்து வீரர்களை போல இந்தியாவில் கிரிக்கெட்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்கள். இப்போது இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர்கள், விராட் கோலிகள் ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு அடுத்து யார்?”
14 வயதில் வாவ்:
“அந்த காட்சிக்கு 14 வயது பையன் வந்துள்ளார். அவர் கிட்டத்தட்ட அடுத்த சச்சின் டெண்டுல்கர் போல. அவரை வைத்து இந்தியா மற்றுமொரு வைரக்கல்லைக் கண்டு பிடித்துள்ளது. அவருடைய ஆட்டம் எளிதில் வெளியேற்றப்படாது. உண்மையில் அவர் ஐபிஎல் போன்ற தொடரில் வாவ் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு விளையாடிய நம்ப முடியாத வகையில் பந்தை அடிக்கிறார்”
இதையும் படிங்க: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான 2 ஆவது பயிற்சி போட்டியில் இருந்து சாய் சுதர்சன் விலகல் – விவரம் இதோ
“14 வயது பையன் விளையாடுகிறார் என்று என்னிடம் சொன்னார்கள். அவர் 14 வயது போல தெரிகிறாரா? நன்றாக வளர்ந்து விட்ட அவர் நல்ல முதிர்ச்சியைப் பெற்றுள்ளார். அவர் பந்தை அடிக்கும் விதம் வாவ் என்று சொல்ல வைக்கிறது. களத்திற்குள் வந்ததும் அவர் சிக்ஸரை அடிக்கத் துவங்குகிறார். என்னுடைய முதல் போட்டியில் நான் மிகவும் பதற்றமாக தண்ணீரில் நீந்தப்போகும் வாத்து போல தடுமாறினேன். ஆனால் இந்தப் பையன் பெரிய இடத்தில் அசத்தியதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தப் பையனுக்கு வெல்டன். அவரைப் போன்ற இளம் வீரர்களை இந்தியா கண்டறிவது சிறப்பானது” என்று கூறினார்.



