டர்பன் நகரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 202-8 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் சதமடித்து 107 (50) ரன்கள் குவித்து சாதனைகளை படைத்து அசத்தினார்.
தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 203 ரன்களை துரத்திய தென்னாபிரிக்கா ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 25, ஜெரால்ட் கோட்சி 23 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்தியா வெற்றி:
அதனால் சிறப்பான வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காட்டுத்தனமாக அடிக்கக்கூடிய ஹென்றிச் க்ளாஸென், டேவிட் மில்லர் ஆகியோருடன் சேர்த்து ரியன் ரிக்கல்டன் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
அதே போல ரவி பிஸ்னோய் தம்முடைய பங்கிற்கு 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார். இந்நிலையில் இந்தியாவின் அந்த 2 ஸ்பின்னர்களும் அதிரடியாக விளையாடக்கூடிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வெற்றி பெற வைத்ததாக முன்னாள் ஜாம்பவான் வீரர் மார்க் பவுச்சர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பவுச்சர் பாராட்டு:
“வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணியில் அட்டகாசமாக வந்துள்ளார். இன்று அவர் பிஸ்னோயுடன் சேர்ந்து பந்து வீசிய விதம் சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் மிடில் ஓவர்களில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அதனால் க்ளாஸென் ஒத்திசைவு இல்லாமல் இருந்தார். உண்மையை சொல்வதனில் அவர் நல்ல ஃபார்மில் இருந்ததாக தெரியவில்லை”
இதையும் படிங்க: நிறைய தோல்வியை பாத்துட்டேன்.. அந்த 2 பேர் கொடுத்த ஐடியாவை செஞ்சதே கம்பேக்கிற்கு காரணம்.. சாம்சன் பேட்டி
“அவர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் ஒரு கட்டத்தில் அவர்கள் ஒன்பது பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தத்தை உருவாக்கினார்கள். அந்த வகையில் உண்மையில் அவர்கள் பெரிய பேட்ஸ்மேன்களை சிறியவர்களாக மாற்றியது போல் இருந்தது என்று சொல்வதே நியாயமாக இருக்கும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



