இந்திய கிரிக்கெட் அணி 2012 முதல் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்தது. ஆனால் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தோற்றுள்ளது.
அந்த தோல்விகளுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சோதனை என்ற பெயரில் அடிக்கடி செய்யும் மாற்றங்கள் மற்றும் தவறான தேர்வுகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அது பற்றி கேட்டதற்கு பிசிசிஐ தான் முடிவெடுக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் பதிலளித்தார்.
அதெல்லாம் சாதனையா:
அத்துடன் இதே கௌதம் கம்பீர் தான் இளம் இந்திய அணியை வைத்து இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து நல்ல முடிவைப் பெற்றுக்கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மக்கள் அதை மறந்து விட்டு விமர்சிப்பதாகவும் கம்பீர் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்தில் 3 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டிய தொடரை இந்தியா சமன் செய்ததெல்லாம் ஒரு சாதனையா? என்று கம்பீரை முன்னாள் மனோஜ் திவாரி சாடியுள்ளார்.
அத்துடன் கம்பீரை பதவி நீக்கம் செய்து அவரிடமிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை காப்பாற்றும் நேரம் வந்துள்ளதாகவும் திவாரி தெரிவித்துள்ளார். இது பற்றி திவாரி பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அவர்கள் பின்பற்றும் திட்டம் சரியாக இல்லை. அதற்கு அணியில் செய்யப்படும் அதிகப்படியான மாற்றங்கள் வெட்டுதல் ஆதாரமாக இருக்கின்றன”
இந்தியாவை காப்பாற்றுங்க:
“இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை, சொந்த மண்ணில் நியூசிலாந்து தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுள்ளது. இந்தியாவுக்கு தனித்தனியான பயிற்சியாளர்கள் தேவை என்பதில் கேள்வியில்லை. குறிப்பாக பாதாளத்தில் தவிக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு தேவையான முடிவை எடுக்க இதுவே சரியான நேரமாகும். இங்கிலாந்தில் இளம் அணியை வைத்து தொடரை சமன் செய்ததாக கம்பீர் சொன்னதை நான் பார்த்தேன்”
இதையும் படிங்க: விராட், ரோஹித், டிராவிட்டால்.. இந்தியா பெற்ற வெற்றியை உங்க பெயரில் எழுதாதீங்க.. கம்பீரை விளாசிய திவாரி
“என்னுடைய கருத்துப்படி இங்கிலாந்து தொடரை சமன் செய்தது இந்தியாவுக்கு நல்ல முடிவல்ல. ஏனெனில் அத்தொடரின் கடைசி நாளில் இங்கிலாந்து தவறான ஷாட்டுகளை அடித்து தோற்றது. நம்மிடம் இருக்கும் திறமையான வீரர்களுக்கு அத்தொடரை எளிதாக 3 – 1 என்ற கணக்கில் எளிதாக வென்றிருக்கலாம். எனவே கம்பீர் தலைமையில் அதை பெரிய சாதனையாக பார்க்க முடியாது” என்று கூறினார்.



