இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் முதல் முறையாக தோற்றது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் தோற்றது. இதன் வாயிலாக 93 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் ஒயிட் வாஸ் தோல்விகளை சந்தித்துள்ளது.
அத்துடன் கௌஹாத்தி போட்டியின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் (408) அடிப்படையில் இந்தியா தங்களது மிகப் பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனையும் படைத்தது. இந்த தோல்விகளுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் அவர் பயிற்சியாளராக வந்த பின்பே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
விராட், ரோஹித், ட்ராவிட் உருவாக்கிய அணி:
மேலும் சோதனை என்ற பெயரில் அடிக்கடி கம்பீர் செய்யும் மாற்றங்கள் மற்றும் தவறான தேர்வுகள் தோல்விக்கு காரணமானதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அதற்கு தமது தலைமையில் இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 ஆசியக் கோப்பையை வென்றதாக கம்பீர் தெரிவித்தார். ஆனால் அவற்றையெல்லாம் மறந்து விட்டு மக்கள் தம்மை விமர்சிப்பதாகவும் கம்பீர் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் டிராவிட், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய முன்னாள் பயிற்சியாளர், கேப்டன்கள் உருவாக்கிய இந்திய அணியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். எனவே அந்த வெற்றிக்கான பாராட்டை கௌதம் கம்பீர் தம்முடைய பெயரில் எழுத பார்க்கக்கூடாது என்றும் திவாரி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
திவாரி விமர்சனம்:
“ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை தாம் வென்றதாக கௌதம் கம்பீர் சொன்ன வீடியோவை நானும் பார்த்தேன். அந்த அணி ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் விராட் கோலி அதைக் கட்டமைத்தார். அதனால் ஒருவேளை கம்பீர் பயிற்சியாளராக இல்லாமல் இருந்திருந்தால் கூட அந்த 2 தொடர்களையும் இந்திய அணி வென்றிருக்கும்”
இதையும் படிங்க: விராட், ரோஹித், டிராவிட்டால்.. இந்தியா பெற்ற வெற்றியை உங்க பெயரில் எழுதாதீங்க.. கம்பீரை விளாசிய திவாரி
“ஏனென்றால் வெற்றிக்கான அணி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தது. கம்பீர் போன்ற வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கான ஆலோசகர் இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சி செய்வது துரதஷ்டவசமானது. நீங்கள் கள (டெஸ்ட்) அளவில் அனுபவத்தைக் கொண்டிருக்காவிடில் எப்படி எதிர்பார்க்கும் முடிவை கொடுக்க முடியும்? அது சாத்தியமற்றது” என்று கூறினார்.



