ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில் மும்பையை 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் குஜராத் நிர்ணயம் செய்த 197 ரன்களை துரத்திய மும்பை 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் அவர் பெரிய ரன்கள் எடுக்கத் தவறி வருகிறார். குறிப்பாக 2021க்குப்பின் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றைத் தொடுவதற்கே தடுமாறி வருகிறது. அதற்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோகித் சர்மாவின் சுமாரான ஆட்டம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடாவிட்டாலும் தொடர்ந்து பெரிய ரன்கள் குவிப்பதில் விராட் கோலி சிறந்தவர் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
கோலி பெஸ்ட்:
ஆனால் ரோஹித் சர்மா தனது ஐபிஎல் கேரியரில் ஒரு முறை கூட 700 – 900 ரன்கள் எடுத்ததில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் மனோஜ் திவாரி பேசியது பின்வருமாறு. “நான் கடினமாக பேச விரும்பவில்லை என்றாலும் சில வீரர்களைப் பற்றி பேச வேண்டியுள்ளது. இது ரோஹித் சர்மா பெரிய ரன்கள் குவிப்பதற்கான சரியான நேரமாகும்”
“ரோகித் போன்ற திறமைக் கொண்டவர் 400 ரன்கள் அடிக்கவே தடுமாறுகிறார். கடந்த வருடம் 400 ரன்கள் அடித்த அவர் அதில் ஒரு சதத்தை அடித்தார். ஆனால் 800 – 900 ரன்கள் எங்கே? ரோஹித் சர்மா அது போன்ற ஐபிஎல் சீசனை எப்போதும் கொண்டிருந்ததில்லை. விராட் கோலி எப்போதும் ரன்கள் அடிக்கிறார். அவருடைய தொடர்ச்சியான ரன்கள் அதிரடிக்கு சமம்”
கலாய்த்த சேவாக்:
“அதே போல ரோஹித் சர்மாவும் ஒரு வருடமாவது 600 – 700 ரன்கள் எடுக்க வேண்டும். கடந்த வருடம் நிறைய சர்ச்சை ஏற்பட்டதால் ரோஹித் மும்பை அணியிலிருந்து வெளியேற விரும்பியதாக செய்திகள் வந்தன. அதற்கு ஆதாரமாக சில ஒலிப் பதிவுகளும் வந்தன. அதையும் தாண்டி மும்பை அவரை தக்க வைத்தது. அதற்கு தகுந்தார் போல் அவர் விளையாடவில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்த பவர் போதுமா.. கழற்றி விட்ட கேப்டன் ரோஹித் சர்மாவை போல்ட்டாக்கி பழி தீர்த்த சிராஜ்? ரசிகர்கள் கருத்து
இது பற்றி சேவாக் பேசியது பின்வருமாறு. “ரோஹித் எப்போது 600 – 700 ரன்கள் அடித்தார் என்று மனோஜ் திவாரி கேட்கிறார். நாமும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள். அவர் 600 – 700 ரன்கள் அடிப்பதைப் பார்க்க நாமும் விரும்புகிறோம். ஆனால் ரோகித் அதை எப்போது செய்தார்? ஐபிஎல் தொடரில் 18 வருடங்களாக அதைச் செய்யாத அவர் தனது கேரியரின் இந்தக் கடைசி காலங்களில் செய்யப் போகிறாரா?” என்று கலாய்த்தார்.



