இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் கேரியரை தேர்வுக்குழு முடிக்க முயற்சித்து வருகிறது. 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் 2024/25 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை.
இறுதியாக குணமடைந்த ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கு தன்னுடைய பங்காற்றினார். ஆனால் அப்போதிலிருந்து தற்போதைய தென்னாப்பிரிக்க தொடர் வரை ஷமி ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. அது பற்றி கேட்டதற்கு அவருடைய ஃபிட்னஸ் பற்றி அப்டேட் தங்களுக்கு தெரியாது என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
தேர்வுக்குழுவின் வேலை என்ன:
இத்தனைக்கும் 2025/26 ரஞ்சிக் கோப்பையின் முதல் 2 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் பெங்கால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற முக்கிய பங்காற்றினார். அதனால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுகின்ற தம்மால் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியாதா? என்று ஷமி கேள்வி எழுப்பினார். அதற்கு ஷமி ஃபிட்டாக இருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார் என்று அகர்கர் தெரிவித்தார்.
அதே சமயம் விரைவில் ஷமியின் ஃபிட்னஸில் முன்னேற்றம் தெரிந்தால் கதை மாறலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி சொன்ன அகர்கர் கடைசியில் தென்னாப்பிரிக்க தொடரிலும் அவரை கழற்றி விட்டுள்ளார். இந்நிலையில் தொலைபேசியில் பேசி ஷமியின் ஃபிட்னஸை அறிந்து அணியில் தேர்ந்தெடுப்பது தேர்வுக்குழுவின் வேலை என்று அகர்கரை முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
திவாரி விமர்சனம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அணியின் வட்டத்திற்குள் தவறான புரிதல் மற்றும் அவநம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது. ஷமி பெங்கால் அணிக்காக தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து தன்னுடைய ஃபிட்னஸை நிரூபித்துள்ளார். ஆனால் அதன் பின்பும் அவரை டெஸ்ட் அல்லது ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. அவருடைய ஃபிட்னஸ் பற்றி அப்டேட் இல்லை என்று தேர்வாளர்கள் சொன்னார்கள்”
இதையும் படிங்க: அந்த பயமே எனக்கு கிடையாது.. தன்னுடைய டி20 கேப்டன் பதவி கில்லுக்கு செல்வது குறித்து – சூரியகுமார் யாதவ் பேச்சு
“ஆனால் அது யாருடைய வேலை? பயிற்சியாளர்கள் மற்றும் உடல் தேர்வாளர்கள் தான் அப்டேட்டை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் ஃபோனை எடுத்து அந்த வீரரிடமே நேரடியாக கேட்கலாம். இந்திய அணியின் வெற்றிகளுக்காக நீண்ட காலம் பங்காற்றிய சீனியர் வீரரான ஷமியை குறைந்தபட்சம் நீங்கள் அழைத்து பேசலாம். அது பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுவின் பொறுப்பாகும்” என்று கூறினார்.



