இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெற்றார். தமிழகத்தை சேர்ந்த அவர் 2010 – 2024 வரை இந்திய அணிக்காக விளையாடி இரண்டாவது அதிகபட்ச விக்கட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர் நாயகன் விருதுகள் வென்ற அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.
ஆனாலும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்தது. அதனால் ஏமாற்றமடைந்த அஸ்வின் கடந்த ஆஸ்திரேலிய தொடருடன் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் கடந்த நியூஸிலாந்து தொடரில் அஸ்வினை கழற்றி விட வேண்டும் என்பதற்காகவே வாஷிங்டன் சுந்தரை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொண்டு வந்ததாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
கம்பீர் தான் காரணம்:
அப்படி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளில் எடுத்த அஸ்வினுக்கு மரியாதை கொடுக்காத கம்பீர் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சுந்தரை தேர்ந்தெடுத்து மீண்டும் அவமானப்படுத்தியதாக திவாரி கூறியுள்ளார். அதனாலேயே மனமுடைந்த அஸ்வின் ஓய்வு பெற்றதாக திவாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டார். வாஷிங்டன் சுந்தர், டானுஷ் கோட்டியான் ஆகியோர் தரமான ஸ்பின்னர்கள் உள்ளூரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அஸ்வின் போன்ற தரத்தையும் நட்சத்திர அந்தஸ்தையும் கொண்ட ஒருவர் இருக்கும் போது சொந்த மண்ணில் நடைபெறும் ஒரு தொடரில் வாஷிங்டன் சுந்தரை வரை கொண்டு வர என்ன தேவை இருக்கிறது?
ஆதரவு கொடுக்கல:
“அது போக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் இருந்தார்கள். அவர்களை விட்டுவிட்டு அஸ்வினுக்கு பதிலாக சுந்தருக்கு நீங்கள் அதிகமான ஓவர்கள் கொடுத்தீர்கள். இது அஸ்வினுக்கு அவமானம் இல்லையா? இத்தனை வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பின்பும் நீங்கள் செய்யும் அவமானத்தை அவர் ஏற்றுக்கொண்டே செல்ல வேண்டுமா?”
இதையும் படிங்க: தோனி இல்ல.. 2 உ.கோ ஜெய்ச்சு கொடுத்த யுவ்ராஜை கோலி தான் இந்த காரணத்தால் கழற்றி விட்டாரு.. உத்தப்பா
“கண்டிப்பாக இது பற்றிய உண்மையை ஒரு நாள் அஸ்வின் வெளியே வந்து சொல்வார். இது சரியான செயல்முறை அல்ல. அவர்களும் வீரர்கள் தான். அவர்களுக்கும் கொஞ்சம் நீங்கள் முதுகில் தட்டி கண்ணியமான ஆதரவு கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக வெளிநாடுகளில் வாய்ப்பளிக்காமல் இந்திய அணி தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றதாக அவருடைய தந்தை ரவிச்சந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கது.