
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். 2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சீனியர்களை தைரியமாக கழற்றி விட்ட அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான், அஸ்வின், ஜடேஜா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். அவர்கள் தற்போது இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றி நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணியில் தமக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் உட்பட அனைவரும் ஆதரவு கொடுத்ததாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். ஆனால் ஆதரவு வழங்க வேண்டிய தோனி மட்டும் வாய்ப்பு வழங்காமல் தம்முடைய கேரியரை முடிப்பதற்கு முக்கிய பங்காற்றியதாக அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி திவாரி பேசியது பின்வருமாறு.
“எனக்கு வீரேந்திர சேவாக் ஆதரவு கிடைத்தது. அவர்தான் எனக்கு அதிகப்படியான ஆதரவு கொடுத்த தனிநபர் என்று எப்போதும் சொல்லி வருகிறேன். சொல்லப்போனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சதத்தை அடித்த நான் ஆட்டநாயகன் விருதை வென்றேன். அடுத்தப் போட்டியில் ஓய்வு எடுத்த அவர் தம்முடைய இடத்தை எனக்காக தியாகம் செய்தார்”
“எனவே நான் தொடர்ச்சியாக விளையாடி அதிக ரன்கள் அடிப்பதை சேவாக் விரும்பினார். நல்ல மனிதநேயமிக்க அவர் இந்திய அணியில் என்னுடைய கேரியரை நீண்ட காலம் கவனித்தார். அதனால் எனக்கு நேர்ந்த அநியாயத்தை அவர் உணர்ந்து வாய்ப்பு கொடுத்திருக்கலாம். எனக்காக தன்னையே பெஞ்சில் அமர வைத்த சேவாக் பிளேயிங் லெவனில் எனக்கான சிறந்த பேட்டிங் இடத்தையும் கொடுத்தார்”
“மேலும் சச்சின் பாஜி, யுவராஜ் சிங், ஹர்பஜன், ஆகியோரும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். என்னுடைய காலத்தில் இருந்த பெரும்பாலான சீனியர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால் அவர்கள் அனைவரிடமும் முடிவெடுக்கும் அதிகாரம் குறைவாகவே இருந்தது. அந்த சமயத்தில் எம்.எஸ். தோனி மட்டுமே முடிவுகளை எடுக்கும் ஒரே நபராக இருந்தார்”
இதையும் படிங்க: இந்த ஒரு சவாலை சமாளித்தால் மட்டுமே.. விராட், ரோஹித்துக்கு 2027 உ.கோ வாய்ப்பு கிடைக்கும்.. பதான் பேட்டி
“அந்த சமயத்தில் இருந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களும் அவர் எடுக்கும் முடிவுகளையே ஆதரித்தார்கள். ஏனெனில் இந்திய கேப்டனிடம் யாரும் சண்டையிட விரும்பவில்லை. ஒருவேளை கேப்டன் பிசிசிஐயிடம் புகார் செய்தால் உடனடியாக பயிற்சியாளர்களின் கழுத்து நெருக்கப்படும். இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் தான் முக்கியமானவர் என்பதை நாம் கடந்த பல வருடங்களாக பார்த்து வருகிறோம். மொத்தத்தில் எனக்கு சீனியர்கள் ஆதரவளிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய தோனியிடம் நான் எதிர்பார்த்த ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.