இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட், டி20 போட்டிகளில் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்கள். அடுத்தாக 2027 உலகக்கோப்பை வரை அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அப்போது 39, 40 வயதில் அவர்களால் ஃபிட்டாக நல்ல ஃபார்மில் விளையாட முடியுமா? என்பது கேள்வியாகும்.
அதனால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாக்கியுள்ளன. இந்நிலையில் டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ள விராட், ரோஹித் தொடர்ச்சியாக விளையாட மாட்டார்கள் என்பது மட்டுமே பெரிய சவாலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார். ஏனெனில் 2027 உலகக்கோப்பை வாய்ப்பை பெறுவதற்கு அவர்கள் தொடர்ச்சியாக விளையாடி தங்களை ஃபிட்டாக நல்ல ஃபார்மில் வைத்துக்கொள்வது அவசியம் என்று பதான் கூறியுள்ளார்.
2027 உ.கோ சவால்:
இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் பொறுத்த வரை தொடர்ச்சியாக விளையாடுவது மட்டுமே ஒரே சவாலாக இருக்கும். மற்றபடி அவர்கள் சிறந்த வீரர்கள். தற்சமயத்தில் தொடர்ந்து ஃபிட்டாக இருந்து தொடர்ச்சியாக விளையாடுவதே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில் விராட் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடப் போகிறார். பின்னர் ஏதேனும் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு இருக்கிறது”
“எதையும் நிரூபிப்பதற்காக அவர் அதை செய்ய வேண்டியதில்லை. ஆனால் தொடர்ச்சியாக விளையாடுவது எளிது கிடையாது. தற்போது டி20 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட்டை பின்னே உட்கார வைத்துள்ளது. அதனால் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டன. அதையும் தாண்டி நீங்கள் தொடர்ச்சியாக விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையை நிர்வகித்தால் 2027 உலகக்கோப்பை பெரிய சவாலாக இருக்காது”
பதான் கருத்து:
“துரதிஷ்டவசமாக விராட், ரோஹித் மேலே அழுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவிடம் நான் பேசினேன். அவர் ஃபிட்டாக இருப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். விராட் கோலியும் இங்கிலாந்தில் பயிற்சி செய்ததை நாம் பார்த்தோம். எனவே அவர்கள் தொடர்பில் இருந்து தங்களுடைய ஃபிட்னஸில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களிடம் இந்திய அணிக்காக விளையாடுவது குறித்த தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியாவுக்கு அடுத்து நீங்க தான்.. ஆப்கானிஸ்தானை கலாய்த்த பாகிஸ்தான் கேப்டன் ரியாக்சன்.. ரசிகர்கள் விளாசல்
“கம்பீர், அகர்கர் பற்றி எனக்கு தெரியும். அவர்கள் வீரர்களிடையே உள்ள தொடர்பில் தெளிவாக இருப்பார்கள். எப்படியிருந்தாலும் தொடர்ச்சியாக விளையாடுவது சவாலாக இருக்கும். ஏனெனில் விராட், ரோஹித் ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகளில் விளையாடிய பின் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார்கள். அப்படி நீண்ட இடைவெளி கழித்து நீங்கள் விளையாடும் போது பின்னடைவு ஏற்படும்” என்று கூறினார்.



