இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் கௌதம் கம்பீர் விமர்சனங்கள் எழுந்துள்ள இந்த சூழ்நிலையை சமாளிக்க ரோஹித் சர்மாவை முன்னே தள்ளிவிட்டு தாம் பின்னே இருப்பதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன் கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பைகளை கம்பீர் மட்டும் தனியாளாக வென்று கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அவருடைய மக்கள் தொடர்பு நிர்வாகிகள் கம்பீர் வென்று கொடுத்ததை போல் விளம்பரம் செய்வதாகவும் திவாரி விமர்சித்திருந்தார். அந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் போன்ற சுயநலமில்லாதவரை சொந்த காரணத்திற்காக இப்படி விமர்சிக்காதீர்கள் என அவருக்கு ஹர்ஷித் ராணா, நிதிஷ் ராணா ஆகியோர் பதிலடி கொடுத்தார்கள்.
இதான் சாட்சி:
இந்நிலையில் இந்திய அணியில் கௌதம் கம்பீர் தமக்கு பிடித்த வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து ஒரு தலைப்பட்சமாக நடக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி என மனோஜ் திவாரி மீண்டும் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்ஷித், நிதிஷ் ஆகியோர் கம்பீரிடம் இருந்து ஏன் ஆதரவை பெற்றிருக்க மாட்டார்கள்? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ராணா விளையாடினார்”
“அது எப்படி நடந்தது? ஆகாஷ் தீப் என்ன தவறு செய்தார்? வங்கதேசத்துக்கு எதிராக அற்புதமாக பவுலிங் செய்த அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அசத்தினார். அப்படிப்பட்ட அவரை வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இல்லாத ஹர்ஷித் ராணாவை தேர்ந்தெடுத்தீர்கள். அது முற்றிலும் ஒரு தலைப்பட்சமான தேர்வாகும்”
தலைப்பட்ச கம்பீர்:
“அதனாலேயே தற்போது கம்பீரின் வீரர்கள் வந்து அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். நான் எதையும் தவறாக சொல்லவில்லை. இந்த விளம்பரத்தை பற்றியே நான் பேசினேன். ராணாவுக்கு சாதகமாக ஆகாஷ் தீப் நீக்கப்பட்டார். ஒருவேளை ராணா திறமையானவர் என்றால் ஏன் நீங்கள் அவரை 5 போட்டிகளிலும் விளையாட வைக்கவில்லை”
இதையும் படிங்க: இந்திய அணிக்குள் அந்த புகைச்சலை ஏற்படுத்துவது கோலி, ராகுலா தான் இருக்கனும்.. உத்தப்பா அதிருப்தி
“ஆகாஷ் தீப்புக்கு யாரும் ஆதரவாக இல்லை. அதே போல அபிமன்யு ஈஸ்வரன் தொடர்ந்து உள்ளூரில் அசத்தி வருகிறார். ஆனால் அவரை எடுக்காத கம்பீர் திடீரென தேவ்தூத் படிக்கலை தேர்ந்தெடுத்தார். ஏன் அபிமன்யு மூன்றாவது இடத்தில் விளையாட தேர்ந்தெடுக்கப்படவில்லை” எனக் கூறினார். இந்த வகையில் சில ரசிகர்களும் கம்பீரை சமூக வலைதளங்களில் ஏற்கனவே விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.