2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்றளவும் இந்திய அணித்தேர்வு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திறமையான சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு சில வீரர்களுக்கு கம்பேக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என பல்வேறு முரண்பாடுகள் தென்பட்டன.
அணித்தேர்வில் நிர்வாகம் தவறு செய்துள்ளது : மனீந்தர் சிங்
இந்திய அணியின் நிர்வாகம் ஒருதலைபட்சமாக இந்த அணித்தேர்வை செய்துள்ளதாகவும் சில விமர்சனங்கள் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவர் இடம்பெறாதது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் சமீப காலமாகவே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் விளையாட தகுதியானவர் என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கும் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் இருவரது இடம் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான மனீந்தர் சிங் கூறுகையில் : உண்மையிலேயே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறாதது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
ஏனெனில் அவர்கள் இருவருமே மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாட தகுதியான வீரர்கள். அவர்கள் ஏன் டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய அணியின் நிர்வாகம் என்ன செய்கிறது? என்றும் யூகிக்க முடியவில்லை. உண்மையிலேயே அவர்கள் இருவரும் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததை நினைத்து வருத்தமாக உள்ளது என மனீந்தர் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மறுபடியும் சொல்றேன்.. அந்த மாதிரி பந்துகளுக்கு 12 ரன்ஸ் கொடுத்தா இன்ரெஸ்ட் வரும்.. ஐசிசிக்கு பீட்டர்சன் கோரிக்கை
எதிர்வரும் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



