விராட் கோலியை அவுட்டாக்கிய தமிழக வீரர் மணிமாறன்.. வரலாற்றில் 10வது தனித்துவ வீரராக அசத்தல் சாதனை

M Siddharth
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அதனால் 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் சொந்த மண்ணில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது.

எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த லக்னோ குயிண்டன் டீ காக் 81, நிக்கோலஸ் பூரான் 40* ரன்கள் எடுத்த உதவியுடன் 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை சேசிங் செய்த பெங்களூரு ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொந்த மண்ணில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அசத்திய தமிழக வீரர்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக மகிபால் லோம்ரர் 33 ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக மயங் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். முன்னதாக இந்த வருட ஐபிஎல் தொடரில் 25 வயதாகும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் மணிமாறன் சித்தார்த் லக்னோ அணிக்காக 2.40 கோடிக்கு வாங்கப்பட்டு அறிமுகமானார். அதில் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

இருப்பினும் இப்போட்டியில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (16) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலான விராட் கோலி அவருடைய பந்தை இறங்கி சென்று பவுண்டரியாக பறக்க விட முயற்சித்தார். ஆனால் அவருடைய சுழலை தவறாக கணித்த விராட் கோலி கடைசியில் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுத்தார். அதனால் இந்தியாவின் மகத்தான வீரராக போற்றப்படும் விராட் கோலியை தம்முடைய கேரியரின் முதல் விக்கெட்டாக எடுத்த மணிமாறன் சித்தார்த் அதை கொண்டாடித் தீர்த்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலியை தன்னுடைய அறிமுக விக்கெட்டாக எடுத்த 10வது வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு மணிமாறன் சித்தார்த் சொந்தமாகியுள்ளார். இதற்கு முன் அசோக் திண்டா, ஆசிஸ் நெஹ்ரா, அல்பி மோர்கெல், சி நந்தா, டி பிரேஸ்வெல், ஜஸ்பிரித் பும்ரா, மிட்சேல் மெக்லீகன், ஹார்ப்ரீத் ப்ரார், தேவாலட் ப்ரேவிஸ் ஆகியோர் விராட் கோலியை தங்களுடைய முதல் விக்கெட்டாக எடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: 17 வருஷமா ஒரே டீமுக்காக ஆடுற இந்த மனுஷனுக்கா இந்த நிலைமை? – கிங் கோலி சந்தித்த மோசமான சாதனை

அந்த வரிசையில் தற்போது 6வது இந்திய வீரராகவும் முதல் தமிழக வீரராகவும் மணிமாறன் சித்தார்த் இணைந்துள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துதுள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளிலும் அவருக்கு லக்னோ அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement