
இந்திய அணியின் இளம் நட்சத்திர இடதுகை ஆட்டக்காரரான திலக் வர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார். அதோடு 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான முதன்மை வீரராகவும் அவர் பார்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவருக்கு ஒரு பெரிய சறுக்கல் ஏற்பட்டது. அதாவது கடந்த மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் திலக் வர்மா பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால் அதற்கு அடுத்து விஜய் ஹசாரே தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியின் போது அடி வயிற்று பகுதியில் காயமடைந்தார். அதன் காரணமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தீவிரமான காயம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பிறகு அந்த காயத்திற்க்கான அறுவை சிகிச்சையை திலக் வர்மா மேற்கொண்டதால் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது சந்தேகமாக மாறியது.
அதனால் அவரால் டி20 உலக கோப்பை தொடருக்குள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கேள்வியும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் திலக் வர்மாவின் உடற்தகுதி குறித்த மிக முக்கியமான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : பி.சி.சி.ஐ-யின் கட்டுப்பாட்டில் இருக்கும் திலக் வர்மாவிற்கு அனைத்து வகையான சிகிச்சைகளையும் முறைப்படி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டுள்ள திலக் வர்மா இன்னும் சில தினங்களில் பேட்டிங் பயிற்சியை தொடங்கி விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் இடம்பெறாத அவர் நிச்சயம் ஜனவரி 28-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நான்காவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 4 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – சூரியகுமார் யாதவ்
மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி ஒருவேளை நியூசிலாந்து தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாடும் பட்சத்தில் டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் விளையாடுவார் என்பது உறுதி.