
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2024 சீசன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதனுடைய 3வது லீக் போட்டி ஜூலை 6ஆம் தேதி இரவு சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் மதுரை பேன்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய சேலம் அணிக்கு 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடியில் அபிஷேக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த பிஸ்த் 5 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் கவின் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 70 (45) ரன்கள் விளாசி அவுட்டானார்.
மதுரை வெற்றி:
அதே போல நான்காவது இடத்தில் அதிரடியாக விளையாடிய விஷால் வைத்யா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 56* (33) ரன்கள் எடுத்தார். அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் 20 ஓவரில் சேலம் 180/7 ரன்கள் எடுத்த நிலையில் மதுரை சார்பில் அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 3, அலெக்சாண்டர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 181 ரன்களை துரத்திய மதுரைக்கு கேப்டன் ஹரி நிசாந்த் ஆரம்பத்திலேயே 8 ரன்னில் அவுட்டானார்.
ஆனால் அடுத்து வந்த ஜெகதீசன் கௌஷிக் மற்றும் சுரேஷ் லோகேஸ்வர் ஆகியோர் ஜோடி சேர்ந்து சேலம் பவுலர்களை வெளுத்து வாங்கினர். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி மதுரையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த போது அதிரடியாக விளையாடிய லோகேஸ்வர் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 69 (38) ரன்களில் அவுட்டானார்.
ஆனால் அடுத்ததாக வந்த சசிதேவ் 13, ஸ்வப்னில் சிங் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாகுறைக்கு ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீசன் முக்கிய நேரத்தில் 57 (46) ரன்னில் அவுட்டானார். அப்போது வந்த சரவணன் 7 ரன்னில் அவுட்டானதால் மதுரையின் வெற்றி திடீரென கேள்விக்குறியானது.
இதையும் படிங்க: ஜிம்பாப்வேவை குறைத்து மதிப்பிட்ட கில் படை.. இந்தியா வரலாறு காணாத தோல்வி.. முடிந்த 12 வெற்றிநடை
குறிப்பாக சன்னி சந்து வீசிய கடைசி ஓவரில் மதுரை வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது முதல் 3 பந்துகளில் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட முருகன் அஸ்வின் மொத்தம் 20* (5) ரன்கள் விளாசி 19.3 ஓவரில் மதுரையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் சேலம் சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றது.