
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசனில் ஜூன் 18ஆம் தேதி சேலத்தில் 16வது போட்டி நடைபெற்றது. ஃஎஸ்சிஎப் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் மதுரை பேன்தர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மதுரை 20 ஓவரில் மிகவும் போராடி 168/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பால்சந்தர் அனிருத் 48 (37), அதிக் உர் ரஹ்மான் 36 (27), சரவணன் 16 (10), குர்ஜப்நீத் சிங் 24 (8) ரன்கள் அடித்து அசத்தினார்கள். நெல்லை அணிக்கு அதிகபட்சமாக சோனு யாதவ் 3, ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
அடுத்து விளையாடிய நெல்லை அணிக்கு துவக்க வீரர்கள் அஜிதேஷ் குருசாமி 0, சந்தோஷ் குமார் 3 ரன்களில் குர்ஜப்நீத் சிங் வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்ததாக வந்த ஹரிஷ் 2 ரன்னில் அவுட்டானதால் 56/3 என நெல்லை ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது கேப்டன் அருண் கார்த்திக் பொறுப்புடன் அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் கைகொடுக்க முயற்சித்த ரித்திக் ஈஸ்வரன் 25 (19) ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக வந்த நிர்மல் குமார் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அபாரமாக விளையாடி வந்த அருண் கார்த்திக் 67 (43) ரன்னில் விக்கட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த சோனு யாதவ் அபாரமாக விளையாடி 32 (20) ரன்கள் எடுத்தார். அதனால் 18 ஓவரில் 158/6 என்ற வலுவான நிலையிலிருந்த நெல்லைக்கு 12 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது 19வது ஓவரை வீசிய சூர்யா ஆனந்த் முதல் பந்திலேயே சோனு யாதவை போல்ட்டாக்கினார். அடுத்த பந்தில் ரன் கொடுக்காத அவர் 3, 4, 5வது பந்துகளில் வள்ளியப்பன் யுவ்தீஸ்வரன், சச்சின் ரதி, இமானுவேல் செரியன் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட்டாக்கினார். அப்படி 3 பந்துகளில் 3 தொடர்ச்சியான விக்கெட்டுகள் எடுத்த அவர் டிஎன்பிஎல் தொடரில் ஹாட்ரிக் எடுத்த பவுலர்களில் ஒருவராக சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: விராட் அளவுக்கு இந்தியா ரோஹித்தை மிஸ் பண்ணாது.. கோலியின் ஓய்வுக்கு இதான் காரணம்.. பாய்காட் பேட்டி
ஒரே ஓவரில் 5 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த சூர்யா 18.5 ஓவரில் நெல்லையை 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மதுரைக்கு 10 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் மதுரை அணி 2வது வெற்றியைப் பெற்று அசத்தியது. மறுபுறம் சொதப்பிய நெல்லை 2வது தோல்வியை பதிவு செய்தது.