
அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து நாடு திரும்பியது. அதன்பின்னர் இந்திய அணி அடுத்ததாக 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது நேற்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படாது பெரியளவில் விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் இளம் இடது கை துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அற்புதமான பார்மில் இருக்கும் போதும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் டி20 அணியில் நிலையான இடத்தை பிடித்து விட்டதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான மதன் லால் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற ஒரு திறமை வாய்ந்த வீரர் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது.
இருப்பினும் தற்போதுள்ள இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பதால் நாம் இந்த ஆசிய கோப்பை தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருந்து வருவதால் அவர் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டது சரியான ஒன்றுதான். இனிவரும் காலங்களில் அவர் மூன்று விதமான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடுவார் என்று நினைக்கிறேன்.
சுப்மன் கில் போன்ற ஒரு மேட்ச் வின்னரை அணியில் சேர்ப்பது தவறு கிடையாது. அதேவேளையில் திறமையான ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது என்று மதன்லால் கூறினார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசியாக கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? – விவரம் இதோ
அதன் பின்னர் தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடி வருவதால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பேக்கப் துவக்க வீரராக இருந்த அவருக்கு அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதே சந்தேகமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.