
இந்திய கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை 2025 தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் தங்களை நம்பர் ஒன் ஐசிசி டி20 அணி என்பதை நிரூபித்த இந்தியா ஆசியக் கோப்பை வெல்லத் தயாராகி வருகிறது.
இதற்கிடையே பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் எளிதாக வென்றது. அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய வீரர்கள் கை கொடுக்காதது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கை எய்தினர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசியக் கோப்பையில் டாஸ் வீசிய பின்பும் போட்டி முடிந்த பின்பும் பாகிஸ்தான் அணியுடன் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி கைகுலுக்கவில்லை. அதனால் கோபமடைந்த பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர். அதன் உச்சமாக சூரியகுமாரை இந்தியில் சுவரியகுமார் அதாவது பன்றிகுமார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் மட்டமாக விமர்சித்தார்.
மேலும் நடுவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களை சித்திரவதை செய்து வெற்றி பெறுவதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் என்றும் யூசுப் மோசமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இப்படி மோசமாக பேசுவதே பாகிஸ்தானின் தராதரமா? என்று 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரர் மதன் லால் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி இந்தியா டுடே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“இது பாகிஸ்தானி மக்களின் குணத்தைக் காட்டுகிறது. நீங்கள் எப்படி ஒருவரை திட்டலாம்? பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இது போன்ற விஷயங்கள் தெரியும். ஒருவரை திட்டுவது முற்றிலும் தவறானது. சர்வதேச அளவில் விளையாடிய ஒரு கிரிக்கெட்டர் (யூசுப்) எப்படி இப்படி திட்ட முடியும்? அது ஒரு முற்றிலுமான முட்டாள்தனம். அப்படி பேசுபவர்கள் படிப்பறிவற்ற மக்களாக இருப்பார்கள்”
இதையும் படிங்க: 6, 6, 6, 6, 6.. 79/6 டூ 169/8.. ஒரே ஓவரில் இலங்கையை 31 ரன்ஸ் தெறிக்க விட்ட நபி.. ஆப்கானிஸ்தானுக்கு சரவெடி சாதனை
“அதனாலேயே அவர்கள் அப்படி செய்கிறார்கள். எங்களுடைய காலங்களில் இதெல்லாம் நடக்கவில்லை. ஸ்லெட்ஜிங் செய்வதைப்பற்றி நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒருவரை தொலைக்காட்சியின் நேரலையில் திட்டுவது சரியான விஷயமல்ல. இதனாலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் சிரமப்படுகிறது. இந்தியாவிடம் தோற்கிறோம் என்பதால் விரக்தியடைந்த அவர்கள் விளம்பரத்துக்கு இப்படி பேசுகிறார்கள். நாம் எப்போதும் அது போன்ற மக்களை தொலைக்காட்சியின் நேரலையில் பேசக்கூடாது” என்று கூறினார்.