இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று மாலை விராட் கோலி தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிரடியாக அறிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு கேப்டனாக அவர் பொறுப்பேற்ற போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7வது இடத்தில் இந்தியா பரிதவித்தது. ஆனால் ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் மற்றும் அதிரடி மாற்றங்கள் ஆகியவை காரணமாக இந்தியாவை வெற்றிப்பாதையில் நடக்க வைத்த அவர் அடுத்த 2 வருடங்களிலேயே உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இந்தியாவை மாற்றினார்.

வெற்றிகரமான கேப்டன்:
அதன் பின் தற்போது வரை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வரும் இந்தியா அவர் தலைமையில் வெளிநாடுகளில் பல சரித்திர வாய்ந்த வெற்றிகளை பதிவு செய்தது. மொத்தம் 68 போட்டிகளில் இந்தியாவுக்காக 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றது மட்டுமல்லாமல் ஆசிய கண்டத்திலேயே வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையையும் படைத்து விடை பெற்றுள்ளார்.
பறித்த பிசிசிஐ :
முன்னதாக 2017 முதல் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்து வந்த அவர் தலைமையில் இந்தியா ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அதன் காரணமாக கடந்த 2021 டி20 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார்.

ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக அப்போது அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதையே சாதகமாக பயன்படுத்திய பிசிசிஐ வெள்ளை பந்துக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்து அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பறித்து அந்த பதவியை ரோகித் ஷர்மாவிடம் வழங்கியது.
பிசிசிஐ தான் காரணம்:
இதனால் மனம் உடைந்துபோன விராட் கோலி தற்போது இந்திய கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டன் பதவியும் வேண்டாம் என முடிவெடுத்து விட்டதாக இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் மதன்லால் கூறியுள்ளார். இது பற்றி இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், “டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து அவரை பிசிசிஐ அல்லது தேர்வுக்குழுவினர் நீக்கியது அவரை இன்னும் எரிச்சலடைய வைக்கிறது என நினைக்கிறேன்.

அதாவது விராட் கோலி இன்னும் “எதற்காக என்னை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினார்கள்” என்ற எண்ணத்துடன் உள்ளதாக கருதுகிறேன்” என தெரிவித்த அவர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கியது விராட் கோலியின் மனதை ஆழமான காயத்தை ஏற்படுத்தியதாலேயே அவர் கடைசியாக வகித்து வந்த டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் முழுக்கு போட்டுள்ளார் என உண்மையை உடைத்து பேசினார்.
இது பற்றி மேலும் பேசிய மதன் லால், “விராட் கோலி ஒரு வெற்றிகரமான கேப்டனாக உள்ளார் என நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வேளையில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கியதன் காரணமாக பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் மீது அவருக்கு ஏற்பட்ட எரிச்சலான எண்ணம் இன்னும் தீரவில்லை என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : அவர் பதவி விலகியிருந்தாலும் அவரோட வேலை இன்னும் பாக்கி இருக்கு – சவுரவ் கங்குலி ட்வீட்
மதன் லால் கூறுவது போல இந்தியா மட்டுமல்லாது ஆசிய கண்டத்தின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருக்கும் விராட் கோலியை பதவி விலக பிசிசிஐ உட்பட யாரும் கோர முடியாது. ஆனால் 33 வயதிலேயே அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார் என்றால் அதற்கு அவரின் ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதே காரணமாக இருக்குமேயன்றி வேறு எதுவும் இருக்க முடியாது.



