இதெல்லாம் கணிக்க முடியாது.. ஏன் திட்டுறீங்க? ரிஷப் பண்ட்க்கு இதை கொடுங்க.. லக்னோ ஓனருக்கு மதன் லால் அட்வைஸ்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற 13வது போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. அப்போட்டியில் சொந்த மண்ணில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ தடுமாற்றமாக விளையாடி 172 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பஞ்சாப் 16.2 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வெற்றி பெற்றது.

அதனால் 3 போட்டிகளில் லக்னோ 2வது தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கேப்டன் ரிஷப் பண்ட் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. இந்த வருடம் லக்னோ அணிக்காக 27 கோடி என்ற வரலாறு காணாத பிரமாண்டத் தொகைக்கு வாங்கப்பட்ட அவர் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளார். ஆனால் அந்த வாய்ப்பில் இதுவரை அவர் பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

திட்டும் உரிமையாளர்:

அதே போல கேப்டனாகவும் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் விக்கெட் கீப்பராகவும் ஸ்டம்பிங் வாய்ப்புகளைத் தவற விட்டு 2 தோல்விகளை சந்திக்க முக்கிய காரணமானார். அதனால் முதல் போட்டியிலேயே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் என்று பார்க்காமல் ரிஷப் பண்ட்டிடம் திட்டாத குறையாக பேசினார். அதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் 2வது போட்டியில் லக்னோ வெற்றிப் பெற்றதால் உடனே அவரை சஞ்சீவ் கட்டிப்பிடித்து பாராட்டினார். ஆனால் மூன்றாவது போட்டியில் லக்னோ போராடாமலேயே தோல்வியை சந்தித்ததால் மீண்டும் அந்நியனாக மாறிய அவர் ரிஷப் பண்ட்டை திட்டும் வகையில் பேசினார். அவர் திட்டுகிறார் என்பது ரிஷப் பண்ட் முகத்தில் வெளிப்பட்ட ரியாக்சனில் பேசுகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஏன் திட்டுறீங்க:

அதனால் இவர் எப்போது தான் திருந்துவார் என்று லக்னோ அணியின் உரிமையாளரை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் டி20 கணிக்க முடியாத விளையாட்டு என்பதால் ரிஷப் பண்ட்டை லக்னோ உரிமையாளர் இப்படி ஒவ்வொரு போட்டியிலும் கண்டிக்கக்கூடாது என்று 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். மேலும் முழு சுதந்திரத்துடன் விளையாடும் வாய்ப்பை ரிஷப் பண்ட்க்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓகே நீங்க ரெடி.. பச்சை கொடி காட்டிய தேசிய கிரிக்கெட் அகாடெமி – பதவி ஏற்கப்போகும் சஞ்சு சாம்சன்

இது பற்றி ட்விட்டரில் மதன் லால் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரிஷப் – மிஸ்டர் சஞ்சீவ் ஆகியோருக்கு இடையே என்ன உரையாடல் நடந்தது என்பது எனக்குத் தெரியாது. இவை அனைத்தும் அறைக்குள் நடக்கலாம். உங்கள் பையன்களை மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை சுதந்திரமாக விளையாட விடுங்கள். டி20 என்பது கணிக்க முடியாத விளையாட்டு” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement