
ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே 17ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 67வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு தேவ்தூத் படிக்கல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 28 (22) ரன்களில் அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த தீபக் ஹூடா நிதானமாக விளையாட முயற்சித்து 11 (9) ரன்னில் நடையை கட்டினார். போதாக்குறைக்கு மறுபுறம் கேப்டன் கேஎல் ராகுல் மெதுவாக விளையாடியதால் 69/3 என லக்னோ தடுமாறியது. ஆனால் அப்போது களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் மும்பை பவுலர்களை வெளுத்து வாங்கி 19 பந்துகளில் அரை சதமடித்தார்.
மும்பை மோசமான சாதனை:
அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய அவர் 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 சிக்ஸருடன் 75 (29) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்த பந்திலேயே மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல் 55 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அர்சத் கான் டக் அவுட்டானாலும் ஆயுஷ் படோனி 22* (10) க்ருனால் பாண்டியா 12* (7) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் லக்னோ 214/6 ரன்கள் எடுத்தது.
மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா மற்றும் நுவான் துஷாரா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 215 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு ரோகித் சர்மாவுடன் சேர்ந்து 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த தேவால்ட் ப்ரேவிஸ் 23 (20) ரன்களில் அவுட்ரானார். ஆனால் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் எதிர்புறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதமடித்து 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (38) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த இசான் கிசான் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் கேப்டன் ஹர்திக் பாண்டியா 16 (13), நேஹால் வதேரா 1 (3) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். ஆனால் அடுத்ததாக வந்த நமன் திர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து போராடினார்.
இருப்பினும் எதிர்ப்புறம் தடவலாகவே விளையாடிய இஷான் கிசான் 14 (15) ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்தினார். அதனால் கடைசியில் நமன் திர் 56* (27) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 196/6 ரன்கள் கட்டுப்படுத்திய லக்னோ 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரவி பிஸ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிங்க: 69/3 என திணறிய லக்னோ.. 258 ஸ்ட்ரைக் ரேட்டில் மும்பையை வெளுத்து தூக்கிய பூரான்.. மாஸ் சாதனை சமன்
இதையும் சேர்த்து 14 போட்டிகளில் 10வது தோல்வியை பதிவு செய்த மும்பை அதிகாரப்பூர்வமாக புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்தது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2 முறை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்த அணி என்ற படுமோசமான அவமான சாதனையை மும்பை படைத்துள்ளது. இதற்கு முன் 2022 சீசனிலும் மும்பை கடைசி இடத்தை பிடித்திருந்தது. வரலாற்றில் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் தொடர்களில் வேறு எந்த அணியும் 2 முறை இப்படி 10வது இடத்தை பிடித்ததில்லை.