KKR vs LSG : வெறித்தனமாக போராடிய ரிங்கு – சிஎஸ்கே’வுக்கு கிடைத்த மிகப்பெரிய உதவி – லக்னோ பிளே ஆஃப்’க்கு சென்றது எப்படி?

KKR vs LSg
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 68வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் ஆகிய அணிகள் மோதின. பிளே ஆஃப் செல்ல அந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ களமிறங்கிய நிலையில் ஏற்கனவே 90% வெளியேறிய கொல்கத்தா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு இளம் வீரர் கரன் சர்மா 3 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அந்த நிலையில் வந்த பிரேரக் மன்கட் அதிரடியாக விளையாட முயற்சித்து 5 பவுண்டரிகளுடன் 26 (20) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் மார்க்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் க்ருனால் பாண்டியா 9 (8) ரன்களிலும் மறுபுறம் தடுமாறிய குவிண்டன் டீ காக் 28 (27) ரன்களிலும் அவுட்டானதால் 73/5 என லக்னோ தடுமாறியது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆயுஷ் படோனி மெதுவாகவே விளையாடி 25 (21) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரான் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 58 (30) ரன்கள் குவித்து மிரட்டினார்.

- Advertisement -

இறுதியில் கிருஷ்ணப்பா கௌதம் 11* (4) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் லக்னோ 176/8 ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன், வைபவ் அரோரா, சார்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 177 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த வெங்கடேஷ் ஐயர் 24 (15) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் நித்திஷ் ரானா 8 (10) ரன்களில் நடையை கட்டினார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ஜேசன் ராய் 45 (28) ரன்களில் அவுட்டாகி செல்ல ரஹ்மத்துல்லா குர்பாஸ் தடுமாறி 10 (15) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அந்த வகையில் கொல்கத்தா 80 ரன்களை கடந்ததுமே ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இறுதியாக குஜராத் முதலிடத்தையும் சென்னை 2வது இடத்தையும் அதிகாரப்பூர்வமாக பிடித்தன. அதன் காரணமாக மே 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சேப்பாக்கத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு நடப்பு சாம்பியன் குஜராத் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

- Advertisement -

அந்தப் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறும். தோற்கும் அணி எலிமினேட்டரில் வென்று வரும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் ஃபைனல் செல்வதற்காக பலப்பரீட்சை நடத்தும் வாய்ப்பை பெறும். அப்படி இரட்டை வாய்ப்பை கொடுக்கும் அந்தப் போட்டிக்கு குஜராத் மற்றும் சென்னை தகுதி பெற்றது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மறுபுறம் அந்த தருணமே அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறிய கொல்கத்தாவுக்கு குறைந்தபட்சம் ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொடுக்க மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் போராடிய நிலையில் எதிர்புறம் ஆண்ட்ரே ரசல் 7 (9) ஷார்துல் தாகூர் 3 (7) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் ரிங்கு சிங் 19வது ஓவரில் நவீன்-உல்-ஹக்கை 4, 4, 4, 2, 6 என 20 ரன்களை விளாசி அரை சதம் அடித்ததால் வெற்றியை நெருங்கிய கொல்கத்தாவுக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தாகூர் வீசிய அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் பெரிய ரன்களை எடுக்க தவறிய ரிங்கு சிங் கடைசி 3 பந்துகளில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு மொத்தம் 67* (33) ரன்கள் எடுத்து வெறித்தனமாக போராடினார்.

இதையும் படிங்க:IPL 2023 : நான் மட்டும் தனியாளா டெல்லியை தூக்கிட முடியுமா? நீங்களே கொடுத்தாலும் எனக்கு அது வேண்டாம் – அக்சர் படேல் பேட்டி

ஆனாலும் 20 ஓவர்களில் 175/7 ரன்களுக்கு கொல்கத்தாவை கட்டுப்படுத்திய லக்னோ வெறும் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 3வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement