
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த மாபெரும் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் அனைத்து அணிகளுமே சூப்பர் 8 சுற்றை நோக்கி விளையாடி வருகின்றனர். இவ்வேளையில் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாகவும், ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களாலும் இந்த தொடரில் இருந்து வெளியேற நேர்ந்துள்ளது.
அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் தற்போது லீக் சுற்று போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் இருந்து வெளியேறி நாடு திரும்புகிறார் என்ற தகவலை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் லாக்கி பெர்குசனின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது அவர்களுக்கு முதல் குழந்தை என்பதனால் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர் நிர்வாகத்தின் அனுமதியோடு தற்போது நாடு திரும்புகிறார் என்ற தகவலை பயிற்சியாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கண்டிப்பா இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும்.. இவர்தான் மேட்ச் வின்னரா இருப்பார் – கிரண் மோரே கணிப்பு
தற்போது லீக் சுற்று போட்டிகள் தான் நடைபெற்று வரும் வேளையில் லீக் சுற்று போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் அவர் அடுத்த கட்ட போட்டிகளின் போது நியூசிலாந்து அணியுடன் இணைவார் என்றும் தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.