பைனலில் கடைசி நேரத்தில் உம்ரான் மாலிக்க்கு டாட்டா காட்டிய நியூசி வீரர் – மின்னல்வேக பந்தை வீசி மாஸ் சாதனை

Lockie Ferguson
- Advertisement -

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 10 அணிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2022 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் இறுதி போட்டி மே 29-ஆம் தேதியான நேற்று இரவு 8 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் எதிரணிகளை திணறடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் சுமாராக செயல்பட்டு 20 ஓவர்களில் வெறும் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 22 (16) கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) தேவதூத் படிக்கல் 2 (10) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

அதனால் 79/3 என தடுமாறிய அந்த அணிக்கு காப்பாற்றுவார் என கருதப்பட்ட ஜோஸ் பட்லரும் 39 (35) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற கடைசியில் சிம்ரோன் ஹெட்மையரும் 11 (12) ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். இப்படி ராஜஸ்தானை பெரிய அளவில் ரன்களை எடுக்க விடாமல் மடக்கிப் பிடித்த குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

குஜராத் சாம்பியன்:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரிதிமான் சஹா 5 (7) மேத்தியூ வேட் 8 (10) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (30) ரன்கள் விளாசி வெற்றி உறுதி செய்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் தனது பங்கிற்கு 45* (43) ரன்கள் எடுக்க கடைசியில் மிரட்டிய டேவிட் மில்லர் 32* (19) ரன்கள் எடுத்து சூப்பர் பினிசிங் கொடுத்தார்.

அதனால் 18.1 ஓவர்களிலேயே 133/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது முதல் வருடத்திலேயே சொந்த மண்ணில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இந்த வெற்றிக்கு 34 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் அழுத்தம் நிறைந்த இந்த மாபெரும் போட்டியில் டாஸ் வென்றாலும் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 2008க்குப் பின் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு பரிதாபமாக தோல்வியடைந்தது.

- Advertisement -

மிரட்டிய லாக்கி:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 5-வது ஓவரின் கடைசி பந்தை வீசிய குஜராத்துக்காக விளையாடும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் 157.3 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன் வாயிலாக ஐபிஎல் 2022 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற 22 வயது இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் படைத்த சாதனையையும் முறியடித்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் உம்ரான் மாலிக் 157.0 கி.மீ வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது.

அதிலும் மின்னல் வேகத்தில் அசால்டாக பந்து வீசும் உம்ரான் மாலிக் ஹைதராபாத் பங்கேற்ற 14 போட்டிகளிலும் அதிவேகமான பந்தை வீசி முதலிடம் பிடித்து அந்த 14 போட்டிகளிலும் அதிவேகமான பந்துவீசிய பவுலருக்கு வழங்கப்பட்ட விருதை தொடர்ச்சியாக வென்று 14 லட்சங்களை அள்ளினார். அதிலும் அவர் வீசிய 157.0 பந்தை யாரும் தொட முடியாமல் இருந்ததால் ஒட்டுமொத்த சீசனில் அதிவேகமான பந்துவீசிய பவுலருக்கு வழங்கப்படும் 10 லட்சம் பரிசு தொகையை அவர்தான் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

கடைசியில் டாட்டா:
ஆனால் சுமாராக பந்து வீசியதால் இடையிடையில் பெஞ்சில் அமர்ந்து வந்த லாக்கி பெர்குசன் நேற்றைய கடைசி பைனல் போட்டியில் வேண்டுமென்றே உம்ரான் மாலிக் சாதனையை உடைத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் அதிவேகமாக பந்துவீசி இந்த சாதனை படைத்தார். அதற்கு பலனாக நேற்று இறுதிப் போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டத்துடன் 10 லட்சம் பரிசுத் தொகையையும் வென்றார். மொத்தத்தில் கடைசி நேரத்தில் வெறும் 0.3 கி.மீ வித்தியாசத்தில் அதிவேகமான பந்தை வீசி உம்ரான் மாலிக்க்கு டாட்டா காட்டி 10 லட்சத்தை தட்டிச்சென்ற லாக்கி பெர்குசனை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது கலாய்த்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்துவீசிய 2-வது பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஷான் டைட் : 157.7 கி.மீ
2. லாக்கி பெர்குசன் : 157.3 கி.மீ
3. உம்ரான் மாலிக் : 157.0 கி.மீ

Advertisement